இலக்கணப்பிழையா, இலக்கணமே பிழையா!
- Unmaththan

- 4 days ago
- 4 min read
"வந்தவங்களுக்கு காபி கொடுமா"; குரல் கேட்டதும் உடனே செய்யும் ஒரு ஏயை (AI) போல அம்மாவின் சொல்கேட்டதும் நிதானமாய் அடுப்பங்கரைவிட்டு வந்தாள். அந்த அன்னநடைக்கு, காபிசிந்திவிட கூடாதென்ற வெளியர்த்தமும், மாப்பிளை தேறுவானா தேறமாட்டானா என அவள் அறிந்துகொள்ள தேவையான கால அவகாசம் அதுதான் என்ற உள்ளர்த்தமும் உண்டு; இவ்விடமும் அவ்விதமே.
அவளை உன்னிப்பாய் பார்த்தேன்; அவள் என்னைவிட உயரமில்லை என நிச்சயமானதும் முதல் பெருமூச்சை விட்டுக்கொண்டே காபியை எடுக்க போனேன். இப்போது அவள் கழுத்தில் முத்துமுத்தாய் வேர்த்திருந்தது; உதட்டின் மேலிதழும் கீலிதழும் சரிவிகிதத்தில்; மூக்கும் கூட என்னை போல் பெருத்தில்லாமல் பொருத்திருந்தது; அவள் உதட்டில் நல்லவேளை மச்சம் இல்லை, அவள் கையிலும் கூட பார்த்தேன் ஏதுமில்லை (தப்பித்தேன் இல்லையென்றால் இவளைப்பார்க்கும் போதெல்லாம் என் ஜோவின் ஞாபகம் வந்தென்னை பிய்த்துப்போடுமே, எல்லாம் அந்த பயம் தான்); இப்போது முன்னைவிட பெரியமூச்சை விட்டு குடிக்க துவங்கினேன். இருந்தாலும் அவள் கூந்தல் இன்னும் நீளமிருந்திருக்கலாம் என, மிச்சமிருந்த என் சொச்ச தலைமயிரை தடவிக்கொண்டே மொத்தமாய் குடித்து முடித்தேன். தரகர் அம்மாவிடம் சொன்னது அப்போது சரியெனபட்டது, "பொண்ணு நன்னா அம்பாள் அபிராமி லட்சணமா, இஷ் மன்னிச்சுடுங்கோ நன்னா மேரி மாதா மாறியே இருப்பாள்னா பாத்துக்கோங்க". தெய்வங்களெல்லாம் காலெண்டர்க்கும் கல்யாணத்துக்கும் மிக கச்சிதமாய் எப்படித்தான் பொருந்திப்போகிறார்களோ.
"எனக்கு மாப்பிள்ளையிடம் பேசவேண்டும்"; பயம் என் குரல்வளையை கவ்வ துவங்கியது. இவள் என்ன சொல்ல போகிறாளோ, "மீசையும் தாடியும் ஏன் சம்பளமும் கலரும் கூட மாப்பிளை ஹைட்டு மாறியே கம்மியா இருக்கு" என சொல்ல போகிறாளா இல்லை கடைசியாய் பார்த்த ஒருத்தி சொன்னாளே "எனக்கு விருப்பம் இல்லை, லவ் மேரேஜ் பண்ணிக்கத்தான் ஆசை, சோ இப் யு டோன்ட் மைன்ட் என்னை பிடிகலனு சொல்லிறீங்களா" அப்படி சொல்ல போறாளா.
"நீங்க இன்னும் கற்போட இருக்கீங்களா" முதல் ஆணியை அடித்தாள்.
"நிஜத்தில் ஆம், நினைப்பில் இல்லை அப்படியில்லை நான்".
"எந்த யோக்கியனும் அவன் எண்ணவெளியில் அய்யோக்கியன்தான்" சிரித்துக்கொண்டே அடுத்தாணியை அடித்தாள்.
தயக்கமாய் நீயெப்படி என மறுகேள்வி கேட்க நானென் குரல்வளையில் கொஞ்சம் எச்சை ஊற்றி தயாராகும்போதே, "நான் ஒருமுறை அபாஷன் கூட பண்ணியிருக்கிறேன், ஆனால் இப்போதும் கற்போடிருக்கிறேன்" என அவள் மிச்சமிருந்த அத்தனை ஆணியையும் மொத்தமாய் அடித்தாள்.
"உன் காதலன் பெயரென்ன"
படாரென சிரித்தாள்; "எனக்கு காதலுண்டு ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் என் காமம் அவனோடு அரங்கேறவில்லை; காதல் உள்ளத்தேவை, காமம் உடலின்தேவை. எல்லாத்தேவைகளும் ஒரேஇடத்தில் எதிர்பார்க்க முயலுதல் மடமை. காதலித்தேன் பிரிந்து விட்டோம்; காமம் கொண்டேன் கருவோடு அவனையும் கலைத்துவிட்டேன்; உண்மை தான் என் தசைதிறந்து விட்டது, என் கருக்குடத்தில் ஒரு துளி விழுந்தும் விட்டது. தசைமூடிக்கொள்ளாது இதயம் மூடிக்கொள்ளும் எனக்கு அதுவே நிகழ்ந்தது, யாரும் நெஞ்சிலில்லை, புதியவள் போலவே வெறுமையாய் இருக்கிறேன். அப்போது கற்போடு இருக்கிறேனென்று தானே பொருள். பக்கத்துக்கு வீட்டு பூங்கொடி அத்லெட் அதனால் இயல்பாய் அவள் கன்னித்திரை கிழிந்துதானிருக்கும் அதனால் அவளுக்கு கற்பில்லையெனலாமா. என்னை விட என் தசைதான் சுத்தம் சொல்லுமென்றால் டாக்டர் கைவசமுண்டு, மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்"
பிறப்புறுப்பில் ஈரங்கசியாது நெஞ்சுறுப்பில் ஈரங்கசிந்து, அவள் பேச்சில் நான் பூப்பெய்திகொண்டிருந்தேன். புல்லென்றாலும் பூமியென சுற்றிவர பெண்கள் நிலவுமில்லை ஆண்கள் உலகமுமில்லை.
"ஹ்ம்ம் புரிகிறது"
"அக்னிப்பரீட்சை இல்லாமலேயே புரிந்து கொண்டதுக்கு நன்றி" என மெதுவாய் சிரித்தாள். ஆனால் அவளுக்கு தெரியாது அவள் என்னுடன் நடத்திக்கொண்டிருக்கும் பரீட்சையில் அக்னி எப்படி வீசிக்கொண்டிருந்தது என.
அவளிடம் என் ஜோவின் கதையை மொத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தேன். "கடைசியாய் அவளை எங்கள் கல்லூரி விழாவொன்றில் பார்த்தேன். குழந்தையோடு வந்திருந்தாள். அந்த பிஞ்சை அள்ளியணைத்து முத்தமிடவேண்டும் போலிருந்தது, ஆனால் அது என்னிடம் வர விரும்பவே இல்லை; அம்மாக்கு தப்பாமல் அப்படியே பொறந்திருக்கு. 'அவரு பார்டர்ல இருக்காரு லீவ்க்கு மட்டும் தான் வருவாரு' என சொல்லி மற்றவர்களை பார்த்து பேச பிரிந்து போனாள், மீண்டுமொருமுறை. இப்போதெல்லாம் நியூஸில் ராணுவம் பற்றி வந்தாலே பயப்படுகிறேன்; வாராவாரம் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்மி காக ஜெபிப்பதெல்லாம், ஜோவின் பொருட்டே"
"ஜோ சுமங்கலியாய் இருக்கவேண்டும் ஆசையிலா இல்லை மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற பேராசையிலா" இம்முறை சவுக்கை கொண்டு வீசினாள். நான் தடுமாறி பேசவருகையில், "எல்லா கேள்விக்கும் பதில் சொல்லத்தேவையில்லை, முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள்" என்று அடிவிழுந்த இடத்தில வருடியும் விட்டாள்.
நிச்சயம் ஒருநாள் "எவன்கூடயோ படுத்தென்ச்சு வந்தவதான நீ" என நானும்; "இன்னும் இன்னோர்த்திய நினைச்சுட்டு சுத்துறயே, யோக்கியனா நீமட்டும்" என அவளும் கேட்போம் எனஇருவருக்கும் நன்றாய் தெரியும், இருந்தும் பரிமாறிக்கொண்டோம். மனம்விட்டு பேசுதல் என்பதே, எதிர்கால சண்டைகளுக்கு பயன்படும் காரணங்களை தேடிக்கொள்ளும் தந்திரம்தானே.
காற்று மெலிதாய் வீசியது. மீண்டும் அவளே ஆரம்பித்தாள், "பையனுக்கு பாட தெரியுமா" என கொஞ்சம் சிரிப்போடும் கொஞ்சம் கண்ணடித்தும் கேட்டாள்.
"ஸ்ருதி கலையாமல் பாடத்தெரியாது"
"என் தூக்கம் கலைக்காமல் பாடத்தெரிந்தால் போதும்"
இம்முறை நான் முந்திக்கொண்டேன், "உனக்கு ஆடத்தெரியுமா"
"ஹ்ம்ம், எப்போதெல்லாம் இரண்டு பாட்டீலுக்கு மேல்போகிறதோ அப்போதெல்லாம்; ஒருமுறை பப்பில் அரங்கேற்றம் கூட நடந்துள்ளது" என எவ்வளுவு சத்தமாய் சிரித்தாள் தெரியுமா. கெட்டிக்காரிதான்.
"பெண்களின் கண்ணுக்குள் கீழ்போகும் பழக்கமுண்டா"
"உண்டு" ஓரமாய் சிரித்தாள்; அருவருப்பாய் பார்த்தாளா என்னை, தெரியவில்லையே. மற்றபெண்கள் நிச்சயமாய் என்னை இப்போது அப்படி பார்த்திருக்க கூடும். அவளே தொடர்ந்தாள், "ஏன் தலைகுனிகிறீர்கள், பார்த்தால் கண்கெட்டுப்போக சூரியகிரகணமா என்ன. தோட்டத்து பூக்களை பார்க்கலாம், பறித்தல் தான் பிழை. ஈக்களும் கொசுக்களும் மொய்க்கலாம் சுத்தலாம் ஆனால் காதோரம் கத்தி வெறுப்பேத்தும் போது
கொன்றுவிடத்தானே தோணும்"
புரிந்தும் புரியாமலும் நான்.
"உங்களுக்கு ஏதும் ஆசை இல்லையா"
"என் அம்மா அப்பாவை பார்த்துக்கொண்டால் போதும் எனக்கு" பழுத்த நெல்லிமரத்தில் கல்லெறிய சிந்தி விழுமே அப்படி கொத்துக்கொத்தாய் சிரித்தாள்.
"நீங்கள் பொறுப்பையும் ஆசையையும் குழப்பி கொள்கிறீர்கள். எப்படித்தான் எல்லா ஆண்களும் ஒரு சேர இப்படி ஒத்தவார்த்தை பேசி நல்லவர்களாகிப் போவீர்களோ தெரியாது, கடவுளே. காப்பகத்தில் சேத்திவிட்டு பணம் கட்டி பாத்துக்கசொல்பவனை கெட்டவனெனவும், கட்டியவளிடம் மாதசம்பளத்தை கொடுத்து பாத்துக்கசொல்பவனை பரிசுத்தமகனாகவும் காட்டி சிரிக்கிறது சமூகம், உண்மையில் இரண்டு பேருமே பொறுப்பை துறக்கத்தானே விரும்புகிறார்கள்"
ஆணிகள் சாட்டைகள் எல்லாம் தாண்டி இப்போது என்னை நிர்வாணமாக்கி சிலுவையில் தொங்கவே விட்டுவிட்டாள்; என் கழுத்து மாலையில் யேசுநாதரும் என்னை போலவே தொங்கி கொண்டிருந்தார்.
"சரி பொறுமையாக சொல்லுங்கள் உங்கள் ஆசைகளை" என சிரித்து அடுத்த கேள்விக்கு கடந்து போனாள், "ஹனிமூன் எங்க போனும் உங்களுக்கு"
"குளிர் தீண்டாத ஏதாவொரு பகுதிக்கு; குளிர் கூடினால் தொட்டாற்சிணுங்கி போல் குறுகிப்போவேன் நான்"
"தொட்டாற்சிணுங்கியா? ஹனிமூனே தொட்டு சிணுங்கதானே. சரி சண்டை வந்தால் எப்படி சமாதானம் செய்வீர்கள்?"
"முத்தம் கூட்டி மொத்தம் சரிசெய்வேன்"
"எவ்வழியில், காந்தியமா இல்லை நேதாஜியமா"
"இடம் பொருள் ஏவல் பொறுத்து"
"பரவாயில்லை, ஓரளவு நல்ல பேசுறீங்க"
"நீங்களும் தான்; எப்பவுமே இப்படிதான் பேசுவீங்களா"
"ஆமா, ஆனா அதிகமா பேசுறதுனால அதும் பசங்க கூட அதிகம் பேசுறதுனால எனக்கு பட்டம் கொடுத்துட்டாங்க; என்னென்னு சொல்லுங்க பாப்போம்"
"ஐட்டம்" தயங்கிதயங்கி சொன்னேன்.
"ஆமா சீக்கிரம் புரிஞ்சுக்குறீங்க. அறிவாளிதான்". இல்லை அப்படி பேர் வைக்கும் சங்கத்தில் நானும் உறுப்பினன் என்று எப்படி சொல்வது அவளிடம்.
"அவங்க மேல கோவம் வரலையா?"
"அது அவர்கள் கற்பனாசக்தி. அதற்குள் எனக்கு கருத்தில்லை அல்லது என் கருத்து தேவையில்லை."
"உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏன்? அறிவாக அழகாக தானே இருக்கிறீர்கள்?"
"ஹாஹா பாரதி எதிர்பார்த்த புதுமை பெண் நானில்லையாம். உங்களுக்கு எப்படி?"
"எனக்கு என் எதிர்பார்ப்புகள் பூர்த்தியானால் போதும்; பாரதியின் எதிர்பார்ப்பு பாரதியோடு. உங்களை எனக்கு பிடித்திருக்கிறது"
எல்லாம் பேசி கிளம்ப போகும்போது, திடீரென என்னை இழுத்து "நான் நைட்டி போடமாட்டன் ஸ்கர்ட் தான் போடுவன் உங்களுக்கு பிரச்னை இல்லனு நம்புறன். போயிட் வாங்க"
என் ஜோவின் எந்த அடையாளமும் இவளிடம் இல்லையெனதானே வந்தவுடன் பெருமூச்சு விட்டேன், இப்போது அவளை போலவே ஸ்கர்ட் பிடிக்கும் என்பதில் மட்டுமல்ல, முக்கியமான விஷயங்களை கிளம்பும் முன் பேசுவதில் கூட இவள் அப்படியே ஜோ தான். இப்போது என் கவலையெல்லாம் தப்பித்தவறி கூட எங்கள் குழந்தைக்கு ஜோவை போல உதட்டிலோ கையிலோ மச்சம் இருந்துவிட கூடாது என்பது தான்"
அவள் வாசலில் பரிசுத்தமாய் நின்று கைகாட்டி வழியனுப்பி கொண்டிருந்தாள் மேரி மாதாவை போலவே சிரித்தமுகமாய். எனக்கு அவளை பிடித்திருக்கிறது நிச்சயமாய் அவளைதான் மணமுடிக்க போகிறேன். பிலாத்து இயேசுவை பார்த்து என்ன சொன்னானோ அதைத்தான் எனக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், "இவளிடம் எக்குறையும் நான் காணவில்லையே". இயேசு மக்களை பார்த்து என்ன சொன்னாரோ அதையே நான் உங்களுக்கு சொல்கிறேன், "பாவம் செய்யாதவர்கள் அவள் மேல் முதல் கல் எரிவீர்களாக".




Comments