எல்லா வாரமும் ஈஸ்டர்
- Unmaththan

- 4 days ago
- 7 min read
எல்லா வருடங்களையும் போல சாதாரணமாகத் தான் விடிந்திருந்தது இந்த புனித வெள்ளியும்; அம்மாச்சி, “ஜெபமாலை ஜெபமாலை” என கூச்சலோடு வரும்வரை. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளிப் போனால், திரு இருதய ஆண்டவர் கோவில் வந்துவிடும். அம்மாச்சி எல்லா வெள்ளிக்கிழமையும் அதிகாலையே சென்று கோயிலை கூட்டி சுத்தம் செய்துவிட்டு வருவாள்; அவளுக்கு எல்லா வெள்ளிக்கிழமையும் புனித வெள்ளி தான். இன்று கூட அப்படித்தான் கிளம்பிப் போனாள். ஆனால், வழக்கத்தை விட வேகமாக ஏன் திரும்பி வந்திருக்கிறாள்? அதுவும் இத்தனை பெரும் கூச்சலோடு?
அம்மா, புனித வெள்ளிக்காக நெடுங்கசப்பேறிய பாகற்காய் தொக்கையும் சாதம் வடித்த கஞ்சியையும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். அப்பா, “சிலுவை நாயகா, மன்னிக்கும் வரம் தா” என்ற பாடலை, ஊருக்கே கேட்கும்படி போட்டுவிட்டிருந்தார்; அந்த சத்தம் தாங்காமல் நான் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தேன். அப்போது தான் அம்மாச்சியின் குரல் போர்வையையும் தாண்டி, ஒரு அடர்க்குளிரை போல என் காதை வந்தடைந்தது: “ஜெபமாலை”. அம்மாச்சியின், பதறிய குரல் எல்லாரையும் பயமுறுத்தியது. அம்மா பதறிப்போய், தான் கிண்டிக்கொண்டிருந்த கரண்டியை அப்படியே போட, சூடான தொக்கு பாவம் அவள் கைகளில் எல்லாம் தெறித்தது. துண்டில் கையை துடைத்தபடியே அம்மா வெளியோடினாள்; “ஏம்மா, என்னாச்சு இப்படி கத்துற”.
“ஐயோ, சாமி சர்வேசுரா. தண்ணி கொடுமா நாக்கு வறண்டு போச்சு” என அம்மாச்சி சொல்லி முடிக்கும்போதே அப்பா சொம்பு நிறைய தண்ணி கொண்டு வந்து கொடுத்தார்.
“ஏம்மாச்சி, இப்படி கத்திட்டு வரீங்க. அப்படி என்னாச்சு” என உறக்கத்தின் கரகர குரலில் நான் கேட்டேன். “இரு இரு குடிச்சு முடிக்கட்டும்” என அப்பா சமிக்கை காட்டினார். அம்மாச்சியின் தொண்டையில் நீர் மெல்ல மெல்ல இறங்கியதை பார்க்க, வேகத்தடையில் பெரிய கார் ஒன்று ஏறி இறங்குவது ஏனோ ஞாபகம் வந்தது. குடித்த சொம்பை அம்மாவிடம் கொடுத்து விட்டு, அம்மாச்சி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
2
காலை ஆறுமணிக்கு சொல்லிவைத்தாற் போல அவளுடைய கண்கள் திறந்து கொண்டன. இடதுகையால் தன் நரைத்த தலையை நீவியபடியே வலதுகையால் வாயை மெல்ல நீவி பின் கண்களை நீவி எழுந்து அமர்ந்தாள். தன் மகளும் மருமகனும் ஏற்கனவே எழுந்திருந்தாலும், பேரனை எழுப்பி விட கூடாது என, ஒரு பூனையே தோற்று போகும் அளவுக்கு மெதுவாக கட்டிலிலிருந்து இறங்கினாள். மருமகன் காய வைத்திருந்த சுடுநீரில் கொஞ்சம் எடுத்து வெதுவெதுப்பாக்கி, கால்களை கழுவிக்கொண்டாள். பின், கொஞ்சம் வாயில் ஊற்றி நான்கு முறை கொப்பளித்து துப்பிக்கொண்டு, முகத்தை கழுவினாள். முகத்தை முந்தானையிலேயே துடைத்தபடி செருப்பை போட்டுகொண்டு கிளம்பினாள்.
திரு இருதய ஆண்டவர் கோவில் வாசலில் இரவு பணியை முடித்த வாட்ச்மேன் முகத்தை கழுவிக்கொண்டிருந்தார். கோவில் வாசல் பக்கம் வரும்போதே இவளை அடையாளம் கண்டுகொண்டு, “வாங்க, கோயில் கூட்ட வந்தாச்சு போலயே” என வாசல் பூட்டை திறந்து விட்டார். சிரித்துக்கொண்டே உள்நுழைந்தாள். கோவிலின் இடப்புறமிருந்த மாதா கெபியில் மிச்சமிருந்த மெழுகுவர்த்திகளை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்தாள்; அப்படியே அந்த இடத்தில் சிந்திய எல்லா மெழுகுநீரையும் சுரண்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். “இந்தாங்கம்மா இதை வச்சு சொரண்டுங்க” என ஒரு குட்டி தகரத்தை கொடுத்துவிட்டு, “நைட்டு ஒரே எறும்புத்தொல்லை அதான் கூட்டிவிட்டுட்டு படுத்தேன்” என துடைப்பதையும் நீட்டினார் வாட்ச்மேன். “சரிம்மா, நான் கிளம்பறேன்” என தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
அவள் கோவிலின் வெளிபுறமெல்லாம் சுத்தம் செய்துவிட்டு, உட்புறம் நுழையும் போது, “அக்கா வந்துடீங்களா எனக்கு முன்னவே” என பாண்டியனின் குரல் கேட்டது. பாண்டியன், அந்த கோவிலுக்கு சுயவிருப்பதில் வந்துபோகிற ஒருவர். எல்லா வெள்ளிக்கிழமையும் அவள் கூட்ட வரும்போது அவரும் வருவார். எப்போதும் போல அன்றும் கையில் ரெண்டு மெதுவடை ஒரு பொங்கல் பொட்டலம் எடுத்துவந்தார்; அவளுக்காகத்தான். “சாப்பிடுங்க்கா, நான் சாமி கும்பிட்டு வந்துறேன்” என அவளை கடந்து உள்ளே போனார். அவள், அவர் கொடுத்த பொட்டலங்களையெல்லாம் ஏற்கனவே அவள் ஓரம் எடுத்து வைத்திருந்த மிச்சமான மெழுகுவர்த்திகளோடு சேர்த்து வைத்தாள். மெழுகுவர்த்தி வீட்டுக்கு, மற்ற அனைத்தும் பேரனுக்கு.
“அக்கா சாப்பிடலையா” என கேட்டுக்கொண்டே கோவிலை விட்டு வெளியே வந்த பாண்டியனிடம், “இல்லைங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கலாம்” என்றாள். “பேரனுக்கு கொண்டு போறேன்னு சொல்லுங்க” என சிரித்த பாண்டியன், “அக்கா நீங்க கூட்டிட்டு கிளம்புங்க, நான் கொஞ்சம் சீக்கிரமே போனும். குட் ஃப்ரைடேக்கு மச்சுனன் வீட்லருந்து வராங்க” என்று விடைபெற்றார்.
பாண்டியன் கிளம்பியதும், கோவிலின் உட்புறங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். சன்னலை, இருக்கைகளை, கதவுகளை எல்லாம் தூசிதட்டினாள். கடைசியாக, கோவில் பலிபீடத்தை சுத்தம் செய்ய படியேறினாள். ஈஸ்டர் வரை, பலிபீடத்தில் இருக்கும் சிலுவையை மூடி வைப்பது வழக்கம். அப்படி போர்த்தியிருந்த துணி, அவள் படியேறிதும் கழன்று கீழே விழுந்தது. அவள் இதை எப்படி மாட்டுவது என, கையில் அந்த துணியை எடுத்து உதறியபடியே யோசித்தாள். அவள் உயரமும் போதாது. மேலே நிமிர்ந்து சிலுவையை பார்த்தாள். சிலுவையிலிருந்த உருவத்தின் உதடுகள் அசைய ஆரம்பித்தன. பிரம்மை என நினைத்து மீண்டும் பார்த்தாள். பாவம் மூதாட்டி, அவள் கண்களில் பிழையில்லை; அவள் தைரியமும் மிச்சமில்லை; அந்த உருவத்தின் உதடுகள் மீண்டும் அசைந்தன. அசைய அசைய அங்கிருந்து சப்தங்களும் கேட்கத் துவங்கின. தன் மூட்டு வலியை மறந்து ஓட ஆரம்பித்தாள்; பேரனுக்கு எடுத்து வைத்திருந்த பொங்கலும் வடையும் அனிச்சை செயலால், அவள் கைகளில் வந்து சேர்ந்திருந்தது.
3
நடந்த கதைகளை எல்லாம் அம்மாச்சி சொல்லி முடித்தபோது, அம்மா சிரிக்க ஆரம்பித்தாள். “நானும் என்னமோ எதோனு ஓடிவந்தேன். நீ என்னடானா சுருவம் பேசுச்சு பாடுச்சுன்னு சொல்லிட்டு இருக்க. அப்படி அடிச்சுப்புடிச்சு ஓடிவர ஆளு, எதுக்கு அந்த உளுந்த வடையும் பொங்கலும் தூக்கிட்டு வரணும்” என அம்மா கேட்டதில், நினைவு வந்து, அவற்றை என்னிடம் நீட்டினாள் அம்மாச்சி.
“நான் ஏன் சாமி பொய் சொல்லணும். எல்லாரும் வாங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்” என அம்மாச்சி, தான் வயோதிகத்தால் உளறவில்லை என்பதை நிரூபிக்க போராடினாள். நாங்கள் மூன்று பேரும் எவ்வளவு சொல்லியும் அம்மாச்சி கேட்பதாயில்லை. அம்மாச்சியை சமாளிக்க முடியாததால், நானும் அப்பாவும் மட்டும் போய் பார்த்துவிட்டு வருவதாக சம்மதித்தோம்.
கோவிலுக்குள் நுழையும்போதே அம்மாச்சி ஏன் பயந்தாள் என புரிந்து கொள்ள முடிந்தது; காரணம், ஒரு ஓலம் நிரம்பிய கூக்குரல் கேட்டது; அதில் பெருந்துயரம் படிந்திருந்தது. நானும் அப்பாவும் வேகமாக பலிபீட படியேறினோம். சிலுவையிலிருந்த உருவம், ஆணிகளால் அறைபட்ட தன் கைகால்களை விடுவிக்க முடியாமல் நெளிந்தபடி உரக்க கத்தியது; மீட்பரை மீட்க வேண்டுமே, பதறிப்போனோம் நானும் அப்பாவும். அப்பா முழங்காலிட்டார்; தன் சட்டையிலிருந்த ஃபோனை எடுத்து பாடலை போட்டுவிட்டார்; “சிலுவை நாயகா, மன்னிக்கும் வரம் தா”.
4
கோவிலின் பக்கத்தில் இருந்த வீடுகளில் கேட்டு ஆணிகளை பிடுங்குவதற்கான அடிப்படை கருவிகளை சேகரித்து வந்து நான் சேர்வதற்குள், அப்பா பதினான்காம் முறை கேட்டுக்கொண்டிருந்தார்; “சிலுவை நாயகா, மன்னிக்கும் வரம் தா”.
இரண்டு நாற்காலியை ஒன்றின் மேல் ஒன்று போட்டு, போராடி போராடி வலது கையிலிருந்த ஆணியை பிடுங்கி எடுத்தோம். அடுத்து இடது கரத்து ஆணி. கடைசியாக கால்களின் ஆணி. பிடுங்கிய ஆணிகளை எல்லாம் என் சட்டைப்பையில் பத்திரபடுத்திக்கொண்டே, மெதுவாக அவரை கீழே இறக்கினோம். வலியில் துடிக்கிறார் என்பதை தாண்டி வேறொன்றும் எங்களுக்கு புரியவில்லை. இரத்தம் படிந்த அந்த முகத்தை, அப்பா நீரால் கழுவி விட்டார். அப்பா ஒருபுறம் நான் ஒருபுறம் தாங்கியபடி, அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினோம்.
நாங்கள் ஆட்டோவை விட்டு இறங்கும்போதே அம்மா வாசலில் காத்துக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு அப்பா ஆட்டோ ஏறியதுமே தகவல் சொல்லிவிட்டிருந்தார். அம்மா ஆட்டோவின் வெளியிருந்து ஒரு கைப்பிடிக்க, விரைவாக அவரை வீட்டுக்குள் கொண்டு சென்றோம். அம்மாச்சி, காலையில் ஏற்பட்ட பதட்டத்தில் மயக்கம் வருவதுபோல இருக்கிறது என சொல்லியிருப்பாள் போலும்; அம்மா, அம்மாச்சிக்கு பொங்கலை சாப்பிட கொடுத்து மாத்திரை போட்டு உறங்க வைத்திருக்கிறாள். அதனால், அந்த கட்டிலில் அவரை கிடத்த முடியாமல், கீழே பாய் விரித்து கால்களை நீட்டி அமரவைத்தோம்.
“அந்த ஃபேன் போட்டு விடு, உப்பசம் அடிக்கும்ல” என்றாள் அம்மா. விசிறி சுழல அறை குளிர் காற்றால் நிறைய ஆரம்பித்தது. அவரின் கழுத்து வரை வளர்ந்த கூந்தல் ஆலமர விழுதுகள் போல ஆட ஆரம்பித்தது. அப்போது தான், அம்மா அதை கவனித்தாள். “ஏன்டா உனக்கும் அறிவு இல்ல; உங்கப்பாக்கும் அறிவில்ல. தலைல வச்சிருக்கிற முள் முடிய கழட்டணும்னு கூட தெரியாதா உங்களுக்கு.” என அவரின் தலையிலிருந்த முட்களால் பின்னப்பட்ட வட்டவடிவ பொருளை மெதுவாக எடுத்தாள். அது அவரின் முடியில் சிக்காகி இழுக்க, அவர் வலியில் புலம்ப ஆரம்பித்தார். அவர் வலி புரிந்தது ஆனால் மொழி … அது என்ன மொழி என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
5
மணி மதியம் 12. அம்மாச்சி இன்னும் எழுந்தபாடில்லை; ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அம்மா காலையில் செய்த தொக்கையும் சோற்றுக் கஞ்சியையும் குடிக்க கொடுத்தாள் அவருக்கு. அவர் ஏதோ சொன்னார். அம்மா எங்களை பார்க்க, நாங்கள் பதிலுக்கு அவளை பார்த்துக்கொண்டோம். என்ன பேசுகிறார், கேட்கிறார் அல்லது சொல்லுகிறார் என ஒன்றுமே விளங்கவில்லை. “என்னடா பண்றது. ஏங்க உங்களுக்கு ஏதும் புடிபடுதா” என்றாள் அம்மா. இல்லை என தலையாட்டினோம்.
“அந்த ஃபோன எடுத்து தேடித்தான் பாரேன், எத கேட்டாலும் தெரியாது முடியாதுனு” அம்மா எரிச்சலின் முதல் படிக்கட்டில் காலை வைத்தாள். அப்போது தான் எனக்கும் பொறி தட்டியது. கூகுள் ட்ரேன்ஸ்லேட்டரை (மொழிபெயர்ப்பு செயலி) எடுத்து, அவர் பேசுவதை பின்தொடர ஆரம்பித்தேன். அவர் அவ்வளவு நேரம் பேசிய பாஷை, ஹீப்ரு என கூகுள் மூலம் தெரியவந்தது. எந்த அலட்டலுமின்றி எளிமையாக, அவர் பேசிய மொழியை எங்களுக்கும் நங்கள் பேசுவதை அவருக்கும் போய்சேர செய்தது அந்த செயலி. இதையே ஒரு மனுஷன் செய்றப்போ, கடவுளுக்கு நான் பேசுனா தான் புரியும் அதுனால நான் தான் ஒசத்தினு என்னென்ன அட்டூழியம். “டேய், பேசுறது கேக்குதா. நெனவு ஒருபக்கம் இருந்தா தான ஆகும். இங்க பேச பேச அய்யாவுக்கு அப்படி அங்கென்ன தனியோசனை” என அம்மா அதட்ட, இயல்புக்கு திரும்பினேன்.
“அட இரும்மா, ஒடனே கத்துவ. அவருக்கு கசக்குதாம், குடிக்க ஏதாது வேணுமாம்.” என்றேன்.
“ஆமா, கசக்க தான பாவக்கா. புனித வெள்ளிக்கிழமை கசப்பா தான சாப்பிடணும்; தெரியாதா அவருக்கு. சரி, ஜூஸ் வேணா போட்டு கொண்டு வா” என்றாள் அம்மா.
“அம்மா, அண்டால தண்ணி இல்லை. சரி கொடத்துல இருக்க தண்ணி எடுத்து ஊத்திக்கிறேன் ஜூஸ் போடுறக்கு” என்றதற்கு சரி என்று முதலில் சொல்லியவள், “இரு, இரு.” என தடுத்தாள். “குடிக்கிற தண்ணி வேணாம், அந்த செவப்பு கொடத்துல உப்புத்தண்ணி இருக்கும் அத எடுத்துட்டு வா.”
நான் கொண்டு வந்த நீரை அவரிடம் நீட்டினேன். அம்மா சொன்னாள்; “சாமி, இது குடிக்கிற தண்ணி இல்லை. இதை அப்படியே குடிக்காம, உங்களுக்கு என்ன வாயிக்கு புடிக்குதோ அதுவா மாத்தி குடிச்சுக்கோங்க. ஏனா, இங்க நல்ல தண்ணி அடிக்கடி வரது இல்லை; ரெண்டு வாரம் முன்ன பைப் ஒடஞ்சு அஞ்சுநாளுக்கு ஒருமுறை வரவேண்டிய தண்ணி பன்னெண்டு நாள் கழிச்சுத்தான் வந்துச்சு. உப்புத்தண்ணி பிரச்சனை இல்லை, நாலுநாளுக்கு ஒருமுறை வந்திரும். அதான் இதை கொடுக்க சொன்னேன்”. அவரிடம் சொல்லியபடியே அப்படியே என்னை பார்த்தாள் அம்மா: “புரிதா, இதுக்குத்தான் பைபிள் படிக்க சொல்லுறது. படிச்சிருந்தா நாலஞ்சு விஷயம் தெரிஞ்சுருக்கும். போய், பைபிள்ல 2 யோவான்ல 7-10வரை எடுத்து படி. எங்க, நீ கோயிலுக்கே வரது கெடயாது. நாயித்துக்கெழம ஒருநா கூட கோயிலுக்கு வராம இழுத்து போத்திட்டு தூங்குற”.
அம்மா சொன்னதை நான் மொழிபெயர்த்து சொல்ல, அவர் அப்படியே செய்தார். நல்ல திராட்சை ரசமாக மாற்றி, தாகம் தீரத்தீர பருகினார். அப்பா ஒரு மிடறு பருகிவிட்டு, “உங்கம்மாச்சி இன்னிக்கின்னு பாத்து அப்படி தூங்கிட்டு இருக்கு; ஒரு டம்ளர் எடுத்து வை அம்மாச்சிக்கு. நல்லா இருக்கு” என்றார்.
6
உண்டு முடித்ததும், “உடற்சோர்வு தாளவில்லை, ஒருமணிநேரம் உறங்கிக்கொள்கிறேன்” என்று படுத்துக்கொண்டார். அவருடைய கைகளை கால்களை மெல்ல பிடித்து விட்டார், அப்பா. அம்மா, அவரின் தலையிலிருந்து கழற்றிய முள்முடியை, இரத்தக்கறை நீங்க அலசி காயவைத்தாள். நான், சிலுவையிலிருந்து பிடுங்கிய ஆணிகளை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். “இது என்ன இப்படி துருபிடிச்சுருக்கு. செப்டிக் ஆகியிரப்போது, இதை ஞாபகார்த்தமா நம்ம வீட்ல வச்சுக்கலாம். அவருக்கு புதுசா மூணு வாங்கி கொடுத்துறு” என்றாள் அம்மா.
அம்மா சொன்னபடியே, மூன்று புதிய ஆணிகளை வாங்கிவந்தேன். வருவதற்குள் அவர் விழித்திருந்தார். உள்நுழைந்த என்னை பார்த்து சின்னதாக புன்னகைத்தார். அவரிடம், புதிதாக வாங்கிய ஆணிகளை காட்டினேன். “ஹ்ம்ம்” என தலையை மட்டும் அசைத்தார். அம்மா, அந்த பழைய ஆணியை வீட்டின் வலப்புறத்தில் அறைந்து, அதில், அன்னலட்சுமி அரிசி கடை என எழுதியிருந்த, ஒரு கையில் குழந்தை யேசுவோடு நிற்கிற மாதா காலண்டரை மாட்டச் சொன்னாள். ஆணிகளை நான் சுவற்றில் அடிக்க, அவர் தன் காதுகளை இறுக மூடிக்கொண்டார். கண்களையும் கூட.
காலண்டரை மாட்டிவிட்டு அவரை கூப்பிட்டு காட்டினேன். “அதுல இருக்கிறது யாருனு அடையாளம் தெரியுதா. உங்கம்மா தான். கைல வச்சுருக்கிற குட்டிப்பையன் யாரு” என அம்மா சிரித்தபடியே அவரை கேட்டார். அவர் கண் பார்த்த பார்வையில் தெளிவாக தெரிந்தது, அவர் அந்த முகங்களை பார்த்ததே இல்லை என்று. இட வலம் திரும்பி, பட் பட் என சத்தம் கேட்க நெட்டை முறித்து எழுந்தார். செம்பட்டை முடி நிறைந்த தலையை சிலுப்பி, தன் முள்முடியை வாங்கி மாட்டிக்கொண்டார். “முடி, நல்லா அடர்த்தியா இருக்குல்ல. அவங்கூரு தண்ணிக்கு கொட்டாதோ என்னமோ” என்றாள் அம்மா. “இதேதான் நான் வளத்துணைப்போ பொறுக்கி மாறி இருக்குனு திட்டுன” என நான் பதில் சொல்ல, “என்ன, வாய் நீளுது” என்ற அப்பாவின் அதட்டல் முதுகில் பட்டது.
“ப்ரியமானவர்களே, நான் விடைபெறுகிறேன், மணி மூன்றாக இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கிறது” என்றார் அவர். உடனே, அவர் முன் அம்மாவும் அப்பாவும் முழங்காலிட்டனர். அவர் அவர்களின் தலைமேல் கைகளை வைத்தார். அம்மா, வெறுமனே அப்படி கைவைக்காமல், பாதிரியார்களை போல நெற்றியில் சிலுவையிட்டு ஜெபிக்க கேட்டுக்கொண்டாள். அவரும் சரி என்று, சிலுவையிட ஆரம்பித்தார்; அவர் கைகள் நடுங்க ஆரம்பித்தது; வெடுக்கென கைகளை பின்னிழுத்துக் கொண்டார்.
இதற்கு மேல் அவரை இம்சிக்க வேண்டாம் என, அம்மாவும் அப்பாவும் எழுந்து நின்றார்கள். அம்மா, மதியம் அவர் உண்டு பண்ணின திராட்சை ரசத்தை ஒரு டம்ளரில் எடுத்து வந்து அவரை குடிக்கச் சொன்னாள். அவர் வேண்டாம் என்றார். “அட கடவுளே, ஒடம்புல சத்தி வேணாமா. சிலுவைல தொங்குறக்கு பெலம் வேணும்ல” என மீண்டும் நீட்ட, அவர் இம்முறை வேறுவழியின்றி வாங்கிப் பருகினார்.
7
கோவிலுக்கு திரும்பி போகும்போது ஆட்டோவில் ஏற மறுத்துவிட்டார். சரியென, நானும் அப்பாவும் அவருடன் நடந்து சென்றோம். தெருக்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள்; அவருடைய உடை தலை முகவாட்டம் எல்லாம், ஏதோ சுற்றுலா வந்திருக்கிற வெளிநாட்டுக்காரர் போல அவரை காட்டியிருக்க கூடும். நடக்கும் போது பேசிக்கொண்டே நடந்தோம்.
“வருடா வருடம், வெள்ளியில் இறந்து மூன்று நாளில் உயிர்த்து எழுதல் சலிப்பாக இருக்கிறது” என்றார்.
“எனக்கும் பாக்குறப்போ பாவமாத்தான் இருக்கு. ஏதோ சர்க்கஸ்ல நெருப்பு வளையத்துல போய்ட்டு வருவாங்களே அதுமாறி; உடம்புல கத்தி வீசி வித்தை காட்டுவாங்களே அந்தமாறி. ஆனா, வருஷத்துல ஒருவாட்டி தானே உங்களுக்கு இந்த பிரச்சனை. இங்க நிறைய பேருக்கு எல்லா வாரமும் இதே கதை தான். அஞ்சுநாளு வேலை செஞ்சுட்டு வெள்ளிக்கிழமை எல்லாம் பொத்துனு செத்தமாறி விழுந்தோம்னா, அடுத்து மூணு நாள் கழிச்சு தான் உசுருவந்தமாறி. என்ன நல்ல விஷயம்னா, உங்கள மாறி, சிலுவையிலே தொங்கித்தான் மூணு நாள் லீவ் வாங்கணும்னு இல்லை, அதுவரை சந்தோசம். இதுல பியூட்டி என்னென்னா, நீங்க தொங்குறத கணக்கு காட்டி இந்த வெள்ளிக்கிழமையும் சேர்த்து லீவு வாங்கிக்கலாம்” என்றேன். அவர் என்னமோ புன்னகை தான் செய்தார். அப்பா தான் கோவமாக முறைத்தார்; அவருக்கு பதில் என்னை சிலுவையில் அறைய கூட அப்பா நினைத்திருக்க வாய்ப்புண்டு.
கோவிலுக்கு வரும்போதே, மணி 2.50 ஆகிவிட்டது. மூன்று மணிக்கு அவர் இறந்தாக வேண்டும். மக்கள் ஜெபிக்க வந்து விடுவார்கள். அதனால், வேகமாக வேலையை செய்தாக வேண்டும். மடமடவென அப்பா ஒரு கையில் ஆணியடிக்க, நான் மறுகையில் அறைந்தேன். இரத்தம் பெரிதாக பீறிடவில்லை. அம்மா நல்லவேளை எங்களுடன் இல்லை; இருந்திருந்தால், “ஒடம்புல இரத்தம் இருந்தாத்தானே வரும். நல்லா மாதுளை அது இதுனு குடிக்கனும், எப்போ பாரு திராட்சை ஜுஸ் மட்டும் குடிச்சா ஆகுமா” என ஆரம்பித்திருப்பாள். மேரி மாதவிடம் கூட இவர் இத்தனை பேச்சு வாங்கியிருக்க வாய்ப்புகள் குறைவு.
கைகளை அறைந்த பின், கால்களில் ஆணி அறைய செல்கையில் அவர், “நெடுநாட்கள் இடது கால் மேல் வலது காலை வைத்தே அறைந்து தொலைகிறார்கள். அப்படியே நரம்புகள் இழுத்து பிடிக்கின்றன. இம்முறை, வலதுகாலை கீழ் வைத்து அதன்மேல் இடது காலை வைத்து அறைந்து தருகிறாயா?” என்றார். நான் பதில் பேசவுமில்லை, அறையவுமில்லை.
“நேரம் இல்லை, என்ன யோசிக்கிறாய்”
“அது ஒன்னும் இல்லங்க. இப்போ நீங்க சொல்றப்போத்தான், இந்தூர்ல நட்ராஜர்னு ஒருத்தர் இருக்காரு. ஒத்த கால தூக்கிட்டு தான் எப்பவும் இருப்பாரு. அவருக்கும் அப்போ இதேமாறி தான வலிக்கும், அதான் நெனச்சன்.” அவர் “இருக்கலாம்” என தலையசைத்தார்.
அவர் சொல்லியபடியே கால்களை அறைந்து முடித்தேன். அப்பா, தன் ஆசை தீர கடைசியாக ஒருமுறை முழங்காலிட்டு, “சிலுவை நாயகா, மன்னிக்கும் வரம் தா”. அப்பா எழுந்ததும், அப்பாவின் சிலுவை நாயகனை பார்த்து “எல்லாம் முடிஞ்சு, போய்ட்டு வரோம்” என்றேன். பின், துணியால் சிலுவையை போர்த்திவிட்டு, நானும் அப்பாவும் பலிபீடம் விட்டு கீழிறங்கயில், “எல்லாம் நிறைவேறியது” என்ற குரல் கேட்டது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, எனக்கு தெரியும், போர்த்தப்பட்ட துணிகளுக்கு கீழ் இப்போது அவருடைய கண்கள் மூடியிருக்கும்.
மக்கள் கூட்டம் ஆலயத்தில் நிரம்ப தொடங்கியிருந்தது.
10-09-2022




Comments