top of page

புத்தரின் பக்கத்து சீட்டிலிருந்தவர்



புத்தனுக்கு இப்போதெல்லாம் வாழ்க்கை அர்த்தமற்றது என்கிற எண்ணம் அதிகமாக தோன்றுகிறது. படுக்கையில் வலமும் இடமும் திரும்பிப்படுக்கிறாரே தவிர, உறங்க முடிவதில்லை. தலைமாட்டில் இருந்த கைபேசியில் மணியை பார்த்தார்; மணி 4.32. யாரையும் எழுப்பிவிடாமல் பக்குவமாக கதவை திறந்து தெருக்கடை நோக்கி நடந்தார். சூரிய உதயத்திற்கு முன், முடிந்தவரை உறைய வைக்க போகிறேன் என மார்கழி, பனிப்போர் நடத்திக் கொண்டிருந்தது. புத்தன் தன் ஸ்வெட்டரை மேலும் இறுக்கி போர்த்திக் கொண்டு நடந்தார். தேநீர் கடை ஒன்றையும் காணோம். குளிருக்கு இதமாய் குடிக்க வந்த அவரை, பனி பருகியது தான் மிச்சம். ஏற்கனவே இருந்த அவர் மனநிலையை இது இன்னும் மோசமாக்கியது. மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினார். ஏடிஎம் செக்யூரிட்டி கேட்டுக்கொண்டிருந்த கண்ணதாசனின் பாடல் புத்தனின் காதுகளிலும் விழுந்தது; ‘காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம்’.

புத்தனுக்கு ஏதோ புரிந்து விட்டது போல தெரிந்தது; அப்படி ஓடினார். பனி[ணி] தான் துரத்துகிறதோ என்னமோ; ரெண்டுசுழியா மூனுசுழியா புத்தனுக்கே வெளிச்சம். தன் வங்கியிலிருக்கும் 75,000 ரூபாயை உறங்கிக் கொண்டிருந்த அம்மையப்பன் வங்கிக்கு சட்டென இடம்பெயர்த்தார். ‘ஓடிப் போகிறேனா தேடித் போகிறேனா தெரியாது நான்ஸி. திரும்பி வரலாம் வராமலும் போகலாம்; எதுவானாலும் நெடுநாள் ஆகும். துன்பம் தொலைக்க மட்டுமல்ல இன்பம் தொலைக்கவும் தான் போகிறேன். இரண்டும் வாழ்வை படுத்தியெடுக்கும். புத்தன் புத்தனாக போகிறேன். கடவுளான பின் சந்திப்போம்’ என ஒரு குறுஞ்செய்தியை முகநூலில் பதிவேற்றிவிட்டு, தன் எல்லா சமூக வலைதள கணக்குகளையும் முடக்கி, கைபேசியை தூக்கி எறிய ஓங்கினார். போன வாரம் தான் இ.எம்.ஐ கட்டி முடித்தது நினைவுக்கு வரவே, படுக்கை மீது வைத்துவிட்டு உடைகளை மாற்ற ஆரம்பித்தார்.


மெல்லிய ஆடையை தேடி போட்டுக்கொண்டார். ஏற்கனவே தேய்ந்த காலடியை தேர்ந்தெடுத்து மாட்டிக்கொண்டார். கம்பளியை போர்த்தி கிளம்பும்போது, இன்னும் வருத்திக் கொண்டால் தானே ஞானம் என அந்த கம்பளியையும் தூர வீசிவிட்டு, வாசலை, தெருவை கடந்து கடந்து கடந்து கடந்து கடந்து கடந்து கொண்டிருந்தார்.

எந்த இடமும் அவருக்கு சரியாய் பிடிபடவே இல்லை. மரங்களை தேடி அலைந்தார். முக்தி அடைய ஒரு நல்ல மரம் கண்டிப்பாக தேவை என தீர்க்கமாக நம்பினார். முதலில் அமர்ந்த மரத்தில் கட்டெறும்பும் செவ்வெறும்பும் புத்தர் மேலே தீரா யாத்திரை நிகழ்த்தின. அடுத்து சென்ற இடத்தில், அணில்கள் ஓயாமல் கத்தி புத்தனின் உயிரை வாங்கின. இன்னோர் இடத்தில் ரம்மிக்கு சேரச் சொல்லி சூழ்ந்து கொண்டார்கள். புத்தர் ஓடி ஓடி கடைசியில் ஒரு இடத்தை பிடித்தார். நீண்ட துயரத்தின் பின் ஒரு கஞ்சா செடியின் கீழே புத்தர் ஞானம் கொண்டார். /இல்லை சர்க்கார் துரத்தி வருவார்கள். அதனால் .../ புத்தர் ஓடி ஓடி கடைசியில் ஒரு இடத்தை பிடித்தார். நீண்ட துயரத்தின் பின் கொதிக்கும் வெயில் நாளில், தேயிலைகள் புத்தரின் வேர்வையில் விழுந்து கொதித்து கொதித்து தேநீர் உண்டாக, தேயிலைச் செடியின் கீழே புத்தர் ஞானம் கொண்டார்.

புத்தன் மாற்றத்தின் அருவியில் நனைய ஆரம்பித்திருந்தார். வாயே திறப்பதில்லை. அமைதியாக இருந்தார். அறிவுரைகளை அடக்கிக் கொண்டார். எறும்புகள் ஏறிச் செல்வதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ரம்மி கூட ஆடுகிறார். யாருடனும் முரணில்லை. ஆஹா ஞானத்தின் திருச்செயலே செயல் என மகிழ்ந்திருந்தார். அடித்தாலும் அணைத்தாலும் புன்னகை அப்படியே இருந்தது உதட்டில். நாட்பட நாட்பட புத்தனின் பித்தம் பிடிக்குள் நிற்பதாய் இல்லை. கடவுள் ஆகும்வரை தான் கல்லாக இருக்க வேண்டும் அப்புறம் அலங்காரம் தான். இனி வருத்திக் கொள்வதில் மனமில்லை. எழுந்தார், வீடு பேறு தேடிவந்த புத்தர், புட்டத்தில் ஒட்டிய மண் துகளை தட்டிவிட்டு வீடு நோக்கி நடந்தார் .

நீண்ட இடைவேளை ஆகிவிட்டதால் புத்தனின் கைபேசி எண்ணை வேறொருவருக்கு கைமாற்றி விட்டார்களாம்; புத்தர் புன்னகையை விடவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் மிக கடினப்பட்டு தான் கண்டு கொண்ட இந்த புன்னகையை பொறுமையை கைவிடக்கூடாது என புத்தர் உறுதியாக இருந்தார். அதனாலேயே செய்தித்தாளை படிப்பதில்லை என முடிவுக்கு வந்தார். கடிதத்தின் மூலம் மட்டுமே உரையாடல்களை நிகழ்த்தினார். புத்தர் தன் ஞானத்தை நினைத்து மெச்சிக்கொண்டார்.


ஒருநாள் காலை, நண்பர்களோடு திரையரங்கம் சென்றிருந்தார். விலையை பார்த்ததும், தன் புன்னகைக்கு கீழே பற்கள் கடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது; எக்காரணத்தைக் கொண்டும் மிக கடினப்பட்டு தான் கண்டு கொண்ட இந்த புன்னகையை பொறுமையை கைவிடக்கூடாது என புத்தர் உறுதியாக இருந்தார்.


படம் ஓடிக்கொண்டிருக்கும் போது அழுத குழந்தையை புத்தரின் கண்கள் முறைக்கிறது என்பதை உணர்ந்தார்; எக்காரணத்தைக் கொண்டும் மிக கடினப்பட்டு தான் கண்டு கொண்ட இந்த புன்னகையை பொறுமையை கைவிடக்கூடாது என புத்தர் உறுதியாக இருந்தார்.


சுவாரஸ்யமான காட்சியில் புத்தரின் காலை மிதித்து கடந்துபோன ஒருவர், புத்தர் திரும்பி கத்தி விடுமுன், புத்தரின் அருகிலிருந்தவரின் முட்டியில் இடித்து அவரின் பாப்கார்னையும் கொட்டிவிட்டார். ‘சாரிங்க’ என பதறிய அவரை, ‘பரவாலைங்க பாத்து உக்காருங்க’ என்றபடியே மடியில் சிந்திய பாப்கார்னை புன்னகையோடு பொறுக்க தொடங்கினார். திரையரங்க கூரையின் கீழே பாப்கார்ன்கள் உதிர புத்தரின் பக்கத்து சீட்டிலிருந்தவர் ஞானம் கண்டார்.


Sun, Nov 28, 2021



 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

©2020 by Jerome. Proudly created with Wix.com

bottom of page