காற்றில்லா மரமாயிரு.
- Unmaththan

 - Sep 14
 - 1 min read
 
Updated: Sep 17

தோற்றுப்போனவனின் திமிரின் மீசை மழிக்கப்படுகிறது.
அவன் நெஞ்சம் வலித்தபடியும், கண்கள் விழித்தபடியும் இருக்கின்றன.
அவன் காயத்தில் குருதி கசிவது இன்னும் நின்றபாடில்லை.
கோபம், ஏமாற்றம் எல்லாம் கலந்து, கண் கொண்டு காண சகிக்காத சகதியாய் சிதைந்து கிடக்கிறது, அவன் அகம்.
அவனுக்கு அவனையே புரியாமல் போகிறது.
பெருமூச்சு விடக் கூட வசதி இல்லாமல் ஆகிறது அவனுக்கு.
யாரிடமும் பேசவோ, சொல்லவோ எதுவுமே இல்லை; கேட்பதற்கு ஆதங்கம் மட்டும் ஏதாவது மிச்சமிருக்கலாம். ஆனால், அதை கேட்கின்ற, ஆர்வமோ ஆற்றலோ ஒன்றுமே பாக்கியில்லை அவனிடம்.
இடைப்பட்ட காலத்தில் எத்தனை மாறியிருக்கிறது; அவனைத் தவிர. இறந்திருந்தால் கூட, சனியன் தொலைந்திருந்தால் கூட ஏதேனும் ஒரு தேதிக்குள் மிச்சமிருந்திருப்பான். அவனோ ஒரு தடயமும் இன்றி மறைந்து போனவன்.
அவனுக்கு தோன்றியது; கரும்பலகை எழுத்தை துடைத்து அழிப்பது போல தான் இந்த வாழ்க்கையென்றும்; சாக்பீஸ் துகள் போல தெறித்து தூரத்தில் விழுந்து குப்பையோடு குப்பையாக தூசியாய் கலந்து போவது தான் இறப்பு என்றும் தோன்றியது அவனுக்கு.
மௌனத்தின் மலை உச்சியில் ஏறி நின்று கடைசியாய் ஒரு முறை உரக்க கத்தினான்: பேரமைதியே வா; வந்து என்னை பருகு. உதடுகளே, கனியோ களையோ நீ துளிர்த்ததெல்லாம் போதும்; இனி உன் உதிர்தல் காலம்; தேவைக்கு மீறி ஒரு சொல்லையும் நீ உதிர்க்க கூடாத காலம். பேசாதிரு, சிரிக்காதிரு, காற்றில்லா மரமாயிரு. மலையின் பள்ளத்தில் எங்கேயோ விழுந்து காணாமல் போனது அவன் குரல்.
3/365




Comments