அந்த மயிலை விட இந்த மயிலின் தோகை வளைந்திருக்கிறது
- Unmaththan

- Apr 5, 2022
- 1 min read

இந்த யாமத்தில் விழித்து விழித்து விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டில் எல்லாரும் உறங்கியிருந்தார்கள். உள்ளிருந்தொரு குரல் கேட்டது; “நீ கடைசியாக பார்த்த சூரிய உதயம் எது?”. மௌனத்தின் போர்வையை இறுக்கிப் போர்த்தி படுத்தபடியே இருந்தேன்.
“சரி, நீ சூரிய அஸ்தமனத்தை பார்த்து எவ்வளவு காலமிருக்கும்?”
“சடாரென வருகிற மின்னலுக்கு நீ கண்களை மூடியது எப்போது?”
“நட்சத்திரங்கள் நிறைந்த நிலா நின்ற இரவை பார்த்த கணத்தை இப்போது நினைவு கூற முடியுமா உன்னால்? ஏதுமே இல்லாத போதும் கூட, மேகங்கள் உட்பட, இருந்த வானத்தை பார்த்த நாளையாவது சொல்லேன்?”
“அருவி உன் தலையை தொட்டது, அலை உன் காலை தொட்டதெல்லாம் எத்தனை வருடங்களுக்கு முந்தைய கதை?”
“கூழாங்கல் உன் பாதம் வருட, உன் கெண்டைக்காலை அழுத்தி ஓடிப்போகிற ஆற்றில் நின்ற சுகத்தை ஏன் நீ இத்தனை காலம் நினைத்துக் கூட பார்க்கவில்லை?”
எந்த பதிலும் இல்லை. என் போர்வையை இழுத்து தரையில் வீசி, கேள்விகள் என்னை கொசுவின் வழி கடித்து எடுத்தன. இந்த நண்பகலில் காரில் போகிறபோது, எப்போதும் முன்னிருக்கையில் அமர்கிற நான், பின்புறத்தில் இருக்க வேண்டியதாயிற்று. இத்தனை நாள் பார்த்த காட்சிகள் போல் அல்லாமல் வேறு கோணத்தில் சகலமும் தெரிந்தன. நான் இவ்வளவு காலம் கண்டுகொள்ளாத, முன்னிருக்கை மேலிருந்த வெளிச்ச துண்டை இன்று தான் பார்த்துக் கொண்டேன். நான் தினந்தோறும் அதிசயத்தின் மேற்பரப்பில் தான் நின்று கொண்டிருக்கிறேன் என அந்த நொடியில் புரிந்தது.
தினம் வருகிற சூரியன் சந்திரன் எல்லாம் ஒன்றே இல்லை. நேற்று வந்த மஞ்சள் நிற நிலா இல்லை இன்று. இன்று பார்க்கிற செந்நிற நிலா நாளை வராது. இன்றென்னை சுடுகின்ற சூரியனை விட நேற்றைய சூரியனுக்கு கருணை கூட இருந்தது. மொட்டை மாடியில் ச்சூ சொல்லி விரட்டிய அந்த காகம் இல்லை இது. அந்த மயிலை விட இந்த மயிலின் தோகை வளைந்திருக்கிறது. எல்லா குக்கூவும் லொள்ளோள்ளும் ஒரே பொருளில் ஒலிப்பவை அல்ல. எனக்கு புரிகிறது, நான் அனுதினமும் மாயாஜாலத்தின் மேலே தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்; என்ன, கண்களை காதுகளை மூடி கொண்டபடி.
உள்ளிருந்து வந்த குரலின் கரங்களை பற்றி, காதருகே நான் இப்படியாக சொல்லி வழியனுப்பியிருக்கிறேன்: ‘இனி மிச்சமிருக்கிற, எல்லா சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் இன்னபிற இயற்கையையும் தினந்தோறும் பார்த்து தொழுக போகிறேன். இது எதுவும் செய்யாமல், வெறுமனே ‘அதியசயங்களே நடக்கவில்லை’ என இனி ஒருநாளும் புலம்பப் போவதில்லை. நாளை வருகிற சூரியனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றபடியே இப்போது தூங்க போகிறேன்’. நான் சொல்லி முடித்த நொடியில், என் நெற்றிமுடி ஆட, கடந்து போனது அந்த உள் ஒலியாகத் தானே இருக்கும்?
05-04-2022
உன்மத்தன்




Comments