செம்புலப் பெயல் நீர் உடையணிந்த அன்புடை நெஞ்சக்காரன்
- Unmaththan

- Dec 26, 2021
- 3 min read

‘சென்று வா…ரு….ங்கள் திருப்பலி நிறை…வுற்றது’ என பாடி முடித்ததும், ஆலயத்தின் கதவருகே, சின்ன பாத்திரத்தில், இருந்த தண்ணீரை தொட்டு நெற்றியில் ஒரு சிலுவையை வரைந்து விட்டு வெளியே நடக்க தொடங்கினேன். அது ஒரு டிசம்பர் காலம்; இல்லை, உண்மையில் அது நவம்பர். ஆனால் டிசம்பரை நவம்பரிலேயே தொடங்க வைக்கிற வல்லமை அந்த ஆளுக்கு உண்டு. தீபாவளியை பல வாரத்திற்கு முன்பே இழுத்துவருகிற வேட்டு வெடிகளைப் போல, ‘ஆமா, இன்னும் ரெண்டு வாரம் இருக்கு, அதனால என்ன, இப்பவே ஆரம்பி’ என பொங்கலையும் ஆயுதப்பூஜையையும் முன்கூட்டி துவக்கி விடுகிற கரும்பு கடைகளைப் போல, டிசம்பரில் வருகிற கிறிஸ்துமஸை, அந்தப் பனியின் இரவை நவம்பரின் பாதியிலேயே நினைக்க வைக்க, அந்த ஆளுக்கும் முடிகிறது; ‘கிறிஸ்துமஸ் தாத்தா’.
ஆலயத்தை விட்டு வெளியே நடக்க தொடங்கினேன். சைக்கிளில் ஒரு பலகையை கட்டி பொம்மை வைக்கிற சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். பலூன் ஊதி ஊதி கட்டிக் கொண்டிருந்தார் இன்னோர் வியாபாரி. ‘உங்களை போல பிறரையும் நேசியுங்கள்’ என கர்த்தர் சொல்லியனுப்பியிருப்பார்; அதனால் நிச்சயம் காசின் வழி கருணை பேசுவார்கள் என கதவருகே காத்திருந்த மனிதர்கள் காத்தபடியே இருந்தார்கள். வாரத்தின் ஏழாம் நாள் கடவுளுக்கு மட்டுமல்ல கறிக்கும் உகந்த நாள் என்பதால், கூட்டம் வாகன நெரிசலை சீக்கிரம் தாண்ட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. இத்தனைக்கும் மத்தியில், வாசலின் அருகே, இரண்டு பேர் ஒரு கனசதுர பெட்டியுடன் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள்.
பலூன், பொம்மை வியாபாரிகள் ஏமாந்து போனார்கள்; கூட்டமெல்லாம் அந்த பெஞ்சை நோக்கியே நகர்ந்தது. அந்த பெட்டியின் மேல் இருந்த ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ முகம் தான் காரணம். அப்படி போன கூட்டத்தில் பதிமூன்று வயது சிறுவனாக நானும் நின்று கொண்டிருந்தேன். அந்த இருவரும் ஒரு துணிக்கடை சார்பாக வந்திருந்தார்கள். அந்த கடை சார்பாக, கிறிஸ்துமஸ் பரிசு என சொல்லி, ஒரு காகிதத்தை நீட்டி, நமக்கு வேண்டிய பரிசுகளை, சில விபரங்களுடன் சேர்த்து எழுதி பெட்டியில் போட்டால், பரிசு வீட்டுக்கு வரும் என்றார்கள். பெட்டியின் மீது பதிக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் தாத்தா கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஒரு பேனாவை வாங்கி, எனக்கு தேவையானதையெல்லாம் எழுதினேன்; ‘ரிமோட் கார் வேணும்; ரிமோட் ஹெலிகாப்டர் வேணும். அப்பறோம் சுஜீத் வீட்டு பக்கத்துல இருக்க பையன் வீட்ல இருந்த அந்த வீடியோ கேம் வேணும், சூப்பர் மேரியோ கேம் சீடியோட’ என எல்லாவற்றையும் எழுதி, விலாசத்தை சரிபார்த்து, பெட்டியில் போட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். ஆலயத்துக்கு போனதைவிட இதுதான் ஆனந்தம்; ஆண்டவர் தராத ஆனந்தம். ‘இவ்ளோ பேர் எழுதியிருக்கோமே எப்படி இவ்ளோ வாங்க காசிருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு’ என யோசித்தபடியே ஆலயத்தை கடந்து நடந்து கொண்டிருந்தேன்.
‘இன்னிக்கு வந்திருக்கும்ல கிப்ட்’ ‘இப்போவே சொல்லிறலாமா எல்லார்டையும் எனக்கு ஸ்பெஷல் கிப்ட் வரப்போதுனு’ இப்படி யோசனைகள் மனசுக்குள் ஓடியோடி, பள்ளியின் எட்டு மணிநேரத்தை எளிதில் கடத்த வைத்தது. நவம்பரே முடிந்து விட்டது. எதுவும் வரவில்லை. ‘அம்மா, போஸ்ட்மேன் வந்தாரா’ என கேட்க ‘தெரிலயே, நான் தூங்கிட்டேன் மதியம்’ என்றாள் அம்மா. ‘தூங்கிட்டியா, ம்மோவ்’. போச்சு போச்சு என் ஹெலிகாப்டரை அம்மா தூங்கி வாங்காம விட்டிருக்கா போலயே, என்ற எண்ணம் டிசம்பர் பனியோடு சேர்ந்து மனசில் விழ ஆரம்பித்தது.
சனி ஞாயிறு என விடுமுறையில் வாசலிலேயே காத்திருந்தேன். எப்போதாது போஸ்ட்மேன் வருவார். அவரின் கால்களையே பார்த்துக் கொண்டிருப்பேன், சுழற்றுகிற பெடலை நிறுத்துகிற அறிகுறியே இருக்காது. சடாரென கடந்து விடுவார். மற்றொரு நாள் தூரத்திலேயே அவர் கொண்டு வரும் பையை பார்த்தேன். மிகச் சின்னதாக இருக்கும். நம்ம ஹெலிகாப்டர்லாம் இதுக்கு எப்படி சரியாய் இருக்கும், என நகர்ந்து விடுவேன். கிறிஸ்துமஸ் வந்தும் ஹெலிகாப்டர் வரவில்லை. சரி, நெறய பேருக்கு தரனும்ல, நியூ இயர்க்கு வந்துரும் என நம்பினேன். நியூ இயர் மட்டுமே வந்து போனது.
‘கிறிஸ்துமஸ் தாத்தா’, செம்புலப் பெயல் நீர் உடையணிந்த அன்புடை நெஞ்சம். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதும், அந்த மனிதன் மீது கொண்ட, ஆச்சரியம், ஈர்ப்பு குறையவே இல்லை. மதத்தின் மீதும் கர்த்தர் மீதும் இருந்த நம்பிக்கை ஆர்வம் விருப்பம் எல்லாம் காலப்போக்கில் தேய்ந்து உதிர்ந்து போய் விட்டபோதும், ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ மீதான உணர்வு இம்மி குறையவில்லை. சின்ன வயதில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேடமிட்டு இரவு பாடி வந்தவர்களை பார்த்து தங்கச்சி அழுதாளாம்; பயந்து போனாளாம். இன்று வரை என்னால் நம்பவே முடியவில்லை, எப்படி ‘கிறிஸ்துமஸ் தாத்தா’வால் பயமுறுத்த முடியுமென்று.
தேவாலயத்தில், பள்ளிக்கூடத்தில், கடைவீதிகளில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ உடையணிந்து ஆடுகிற எல்லாரும் ஒரே விதமான பெருமகிழ்வை தான் தருகிறார்கள் எனக்கு. பல சமயங்களில் சாதாரண மனிதன் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’வாக மாறுகிற நொடியை பார்த்திருக்கிறேன். ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேடமிடுகிற நபர் காலாடையை மாட்டிக்கொண்டு நிற்பார்; தலையணையை அவரின் வயிற்றில் இறுக்கி கட்ட சிலர் உதவுவார்கள்; அந்த செந்நிற தோள்பையில் சாக்குலேட்டை சிலர் நிரப்புவார்கள்; வெண்ணிற மீசை தாடிகள் கொண்ட அந்த முகத்தை எடுத்து அந்த நபர் மாட்டிக்கொண்டு, தோள்ப்பையை எடுத்து போட்டுக் கொள்வார். ஒரு குச்சியொன்று கையில் கொடுத்து, கூடவே துணைக்கு செல்ல ஒன்று இரண்டு பேர் தயாராக இருப்பார்கள். ‘ஜிங்கிள் பெல்’ பாட்டை ஓட விடுவது தான் மிட்சம். சற்று முன் பார்த்த மனிதன் காணாமல் போயிருப்பான்; ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ மட்டும் தான் தெரிவார், அந்த சிரிப்பிருக்கிறதே, அதை பார்க்க வேணும் உங்கள் கடவுள்கள் ஒருமுறை பிறந்து வரலாம். ஒருமுறை, ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ முகமூடிக்கு பின்னிருந்து எங்கள் நிம்மி மிஸ் வெளியே வர, ‘கிறிஸ்துமஸ் தாத்தா’வின் பின்னால் யாரும் நின்று கொள்ளலாம், எந்த பேதமுமில்லை என புரிந்துகொள்ள முடிந்தது.
‘ஜிங்கிள் பெல்’ பாட்டு இசைக்க ஆரம்பித்ததும், துள்ளி நடனமிட்டு கூட்டத்தில் இறங்கிவிடுவார் நம் கதாநாயகன். வயிறை இந்தப்புறம் அந்தப்புறம் அசைத்து அசைத்து ஆடுவார். அவரின் வயிற்றை தொட்டு பார்க்கிற எங்கள் கைகளை கட்டுப்படுத்த, அவரின் கூட வந்தவர்கள் முயற்சி செய்வார்கள். மெத்மெத்தென இருக்கிற அந்த தலையணை வயிறும், வெள்ளை நிற கையுறை கொண்ட அந்த கைகளும் அப்படி மிருதுவாக இருக்கும். எத்தனை கரடு முரடனாலும், அந்த உடையை மீறி அந்த உடையின் மென்மையை மீறி வெளியே வர முடியாது. ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ ஒரு மாயாவி. ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷத்திற்காவது எப்படியாவது உடம்பை ஏத்தி கொள்ள வேண்டும், இரண்டு மூன்று தலையணை வைத்து கட்டிக்கொண்டாலும் அது நம்புமளவுக்காது இருக்க, உடம்பை ஏற்ற வேண்டும்; என்ற பேராசை நின்று நீடுவாழ்கிற தின்னுமென் னெஞ்சில்.
ஆலயங்களில் கூட, ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வருகிற நிகழ்வு மட்டும் தனித்துவமானது. மற்ற சடங்குகளைப் போலல்லாமல், ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வந்ததுமே மக்களை நோக்கி சென்றுவிடுவார்; யாரையும் வணங்க மாட்டார்; ஆட ஆரம்பித்துவிடுவார்; மிட்டாய்களை தூக்கி வீசி குதூகலம் ஆக்கிவிடுவார்; தூங்கிவிட்ட குழந்தைகளை, கால் வலியில் அமர்ந்த வயதானவர்களை என எல்லாரையும் எழுப்பி விடுகிற யுக்தி கர்த்தரை விட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும்; மனிதர்கள் முக்கியம், பேரன்பு முக்கியம்; பெருமகிழ்வே பிரதானம் என இறைவனை விட ‘கிறிஸ்துமஸ் தாத்தா’வுக்கு நன்றாக புரியும். சும்மாவா, செம்புலப் பெயல் நீர் உடையணிந்த அன்புடை நெஞ்சக்காரனல்லவா எம் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’.
உன்மத்தன்
25-12-2021




Comments