top of page

ஆட்டோ ரவி

Updated: Jun 10, 2024



ஆழ்வார் பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை மெட்ரோவுக்கு போக ஆட்டோவுக்கு காத்துக்கொண்டிருந்தேன். வெயில் தன் கரங்களால் என் தோள்களை மெல்ல அழுத்திக் கொண்டிருந்தது. கவனிலிருத்து யாரோ செலுத்தியது போல, ஒரு ஆட்டோ என் வலப்புறமிருந்து நல்ல விசையுடன் வந்தது; என் கால் விரல்களை விட்டு கொஞ்சம் தள்ளிய தொலைவில் நின்றது. “எங்க சார் போனும்”. நல்ல சிரித்த முகம், கழுத்து வரை நீண்டு விழுகிற முடி, நெற்றியில் இரண்டு மூன்று பொட்டுகள்.


‘தேனாம்பேட்டை மெட்ரோ. எவ்ளோ ஆகும்’


“ஒரு எழுவது ரூபா குடுங்க” ஏறி அமர்ந்த அடுத்த நொடியில் ஆட்டோ வேகமாக நகர துவங்கியிருந்தது; அதுக்குள்ள மெட்ரோ-ல ஏறிட்டோமா என்ன என குழும்புகிற அளவுக்கு வேகமாக நகர்ந்தது.


“மெட்ரோல இருந்து எங்க சார் போனும் நீங்க”. கிண்டி என்றேன்.


“ஆட்டோலேயே போயிரலாமா” நான், இல்லை என்பதுபோல முகபாவனையில் பதில் சொன்னேன். “கட்டுபடி ஆகாதா உங்களுக்கு. பரவலா, நீங்க நல்லா கூலிங்கா போங்க சார் மெட்ரோலயே” என சிரித்தபடி ஆட்டோவை முறுக்கினார். ஒரு பெரிய யு-டேர்ன் போட வேண்டியிருந்தது. ஆனால், மடாரென வண்டியை சின்ன இடைவெளியில் திருப்பி, யு-டேர்ன் இல்லாமலேயே போய்க் கொண்டிருந்த அவரை, கொஞ்சம் திகிலுடன் தான் பார்த்தேன். எதுவுமே பேசவில்லை நான்.


“சுத்தினு வந்தா நேரம் ஆகும் சார். நீங்களும் டைம்க்கு போணும்ல” என புன்னகையோடு தன் சாகஸத்தை பற்றி பேச ஆரம்பித்தார். போலீஸ் பாத்தா என்ன பண்ணுவாங்க என கேட்டேன். “நம்பரை நோட் பண்ணிருவான் சார். FC போறப்போ பைன கட்ட சொல்லுவான். டூ வீலர் மாறி, அங்கேயே நிறுத்த மாட்டான், FC அப்போதான் கேப்பானுங்க. நீங்க வெளியூரா”. நான் ஆம் என்றேன்.


நான் ஊருக்கு புதுசு என தெரிந்ததுமே, அவர் நாங்கள் போன வழியில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். ‘இப்போ நாம இருக்கறதுதான் சார் அண்ணாசாலை. நீங்க திரும்பி வரப்போ 45ல ஏறுங்க. அது நேரா வந்து, இதோ நம்ம நிக்குற சிக்னல் லெப்ட்ல போகும். பஸ் வரப்போ காட்டுறேன் பாருங்க.” எதிரில் ஒரு பஸ் வந்துகொண்டிருந்தது. “அதோ பாருங்க, இப்போ திரும்பும் பாருங்க” என சொல்லிக்கொண்டே அதைப்பார்த்தார்; அது நேராக போய்விட்டது. பௌண்டரி என நினைக்கிறபோது யாராது குறுக்கே பாய்ந்து தடுத்துத் தொலைவார்களே, அப்படி ஏமாந்து போனார்.


“இருங்க, அடுத்த பஸ் பாப்போம்” அடுத்த பஸ் வந்தது. கோல் விழுமா என்கிற ஆர்வத்தோடே அதை பார்த்தார். பஸ் அவர் சொன்னதுபோல திரும்பியது. “பாத்தீங்களா” என ஒரு கையை பின்பக்கம் சாய்த்து, ஜெயிச்சுதுவிட்ட சிரிப்போடு சொன்னார். சிக்னல் தீர்ந்து, எங்கள் வண்டி மீண்டும் கிளம்பியது. இடம் வலம் சாய்ந்து சாய்ந்து போய்க்கொண்டிருந்தது வண்டி. அவர் எதோ நெகிழி கட்டமைப்பில் இருப்பது போலவும், யார்மேல் மோதினாலும் அடிபடாது என்பதுபோலவும் ஆட்டோவை செலுத்திக் கொண்டிருந்தார். “ங்கோத்தா சிக்னல பார்த்து வரமாட்டியா” என ஒருவரை திட்டியபடியே வேகமாக சென்று கொண்டிருந்தார்.


‘உங்க பேர் என்னங்னா.’


“ஆட்டோ ரவி. சும்மா என் நம்பரை போடுங்க கூகுளே சொல்லும் ஆட்டோ ரவின்னு” என்றபடியே தன் நம்பரை சொல்ல ஆரம்பித்தார். கடமைக்கு கேட்டபடி அமைதியதாக இருந்தேன். அவர் பத்து பத்து வினாடிகளில் திரும்பி, வந்துச்சா, பாத்தீங்களா என்றார். சரி பார்ப்போம் என, டைப் செய்து பார்த்து அவரிடம் சொன்னேன். “வருதுங்னா, ஆட்டோ ரவினு வருது” அவர் முகம் இன்னும் கூடுதல் சிரிப்பை காட்டிக்கொண்டிருந்தது. எங்கள் எல்லாரையும் துரத்திய வெயில், “முன்னாடி யாரு ஆட்டோ ரவியா, சரி உன்மேல விழலைப்பா” என்பதுபோல அவரை மட்டும் தொடாமல் அவர் சிரிப்பை உருக்காமல் விட்டிருந்தது.


தேனாம்பேட்டை மெட்ரோ வந்ததுமே, “கிண்டி தானே, ஆபீஸ் பேரு சொல்லுங்க நானே விட்டுறன். நூத்தியென்பது ரூபா தாங்க” என்றார். எனக்கு அந்த ஆட்டோவை விட்டு இறங்க தோன்றவே இல்லை. “இன் தேர்ட்டி மீட்டர்ஸ் டேர்ன் ரைட்” என்பதை தாண்டி ஒன்றும் சொல்லாத கூகள் குரலை விட, அவரோடு பயணிக்க பிடித்திருந்தது. சரி எடுங்க போலாம் என்றேன். மீண்டும் தன் பேச்சை ஆரம்பித்தார் அவர். எல்லார்கிட்டயும் இப்படி பேசுவீங்களா என்றேன்.


“கேட்டா பேசுவன். சிலர் ஒரு டைப்பா பேசுவாங்க. சிலருக்கு நான் மொக்கை போடுறன். முகத்தை பாத்தாலே தெரியும் சார், யார்ட்ட பேசணும்னு. நீங்க வெளியூரு, அப்போ நாங்கதான சொல்லணும். போறவழில என்னலாம் இருக்குனு தெரிஞ்சுனு போனாதான சார் நல்லா இருக்கும். நீங்க எங்க போனும்னு சொன்னீங்க கிண்டிதானே. உக்காருங்க நீங்க, சூப்பரா சுத்திக்காட்டுறன் நான்.”


“சார் லெப்ட்ல பாருங்க, இதான் YMCA கிரௌண்ட். போனவாரம் புக் விழா நடன்ச்சு. செம்ம கூட்டம் சார், இங்க பாருங்க, இந்த செவுத்துக்கு பின்னால தான், அந்த கேம். குச்சிய வச்சு ஒரு குட்டிப்பால அடிப்பானுங்களே அது ஏன்னா சார், அது இதுக்கு பின்னாடிதான். நம்ம பாக்கக்கூடாதுனு பெருசா கட்டிருக்கானுங்க செவுரு. அந்நியன் படம் பாத்தீங்களா, அதுல விக்ரம் குதிச்சு குதிச்சு ஓடுவானே, அந்த பில்டிங் ரைட்ல வரும் பாருங்க. இந்த ஓட்டல் இருக்கே, ரொம்ப பேமஸ், மோடி வந்தப்போகூட இங்கதான் இருந்தாரு. அந்த கோர்ட் இருக்குல்ல, இது ஹை கோர்ட் இல்ல, அது வேற, இது அடி தடி வெட்டு குத்து”


பேசி பேசி அடுத்த சிக்னல் வந்துவிட்டோம். நாங்கள் கிளம்புவதற்குள் அடுத்த சிக்னல். “இப்போ யாரு போய்ட்டாங்கனு இவன் மறுபடி சிக்னல் போட்றான். நாலு வண்டிகூட போகல” என பக்கத்தில் இருந்த வண்டிக்காரரை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். வண்டியை எடுத்ததும் மறுபடி பேச்சு ஆரம்பமானது. “இதான் சார், கத்திப்பாறை. இந்த பிரிட்ஜ் இருக்கே சூப்பரா இருக்கும். மேல இருந்து பாத்தா பட்டர்பிளை மாறி தெரியும்.” நீங்க மெட்ரோல போயிருக்கீங்களா என கேட்க தோன்றியது; கேட்டேன்.


“நான் போல சார், என் பொண்ணு போயிருக்கா. நீயும் போப்பா என்ஜாய் பண்ணுனு சொல்லுவா. ஆனா நான் போல சார், நானே மெட்ரோல தான இருக்கன்” என ஆட்டோவை காட்டி இன்னும் கூடுதல் சிரித்தார்.


“உங்க கம்பெனி பேரு சொல்லுங்க சார்”. என் கையில் இருந்த மேப் பார்க்க எனக்கு தோன்றவில்லை; அவரும் கேட்கவில்லை. கம்பெனி பேரை மட்டும் சொன்னேன். “வுடு சார், கண்டுபிடிச்சுறலாம்” என ஒவ்வொரு கட்டிடமாக பார்த்துக்கொண்டே போனோம். ஒரு இடத்தில், இல்ல நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என்றேன். “அதெல்லாம் வேணாம். நீங்க எங்க போணுமோ அங்க விட்டுணு போறன். யாரைய்யாது கேட்டு போயிரலாம். ஆட்டோக்காரன் காசவாங்கிட்டு எங்கயோ எறக்கிவிட்டுட்டான்னு நீங்க திட்டுவீங்க அப்புறம்” என சிரித்தபடியே தேட ஆரம்பித்தார்.


ஒருவழியாக கண்டுபிடித்தோம். நான் இறக்கிவிட சொன்ன இடத்திலிருந்து, கொஞ்சம் தூரம்தான். “பாத்தீங்களா, இவ்ளோ தூரம் நீங்க நடந்து அலஞ்சுருப்பீங்களா. வெயில்ல வேர்த்து டையர்ட் ஆயிருப்பீங்க பாவம்” என இறக்கிவிட்டவர், “வேலைய முடுச்சுட்டு கூப்பிடுங்க, பக்கத்தில இருந்தா வந்து கூட்டிட்டு போரன், இல்லனா பஸ்ல போயிருங்க. மறந்துறாதீங்க, பஸ் நம்பர் 45” என்றார். இறங்கி, 220 ரூபாயை கொடுத்துவிட்டு, உங்கள போட்டோ எடுத்துகிட்டுங்களா நான் என்றேன். “எடுத்துக்கோங்க சார். பேரு ஆட்டோ ரவி” என்றபடியே நகர்ந்து போனார்.


அதே தினம், மற்றோரு ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டு பயணித்தேன். அவர் பெயர் ரஜினிகாந்த். இருவரிடம் எது என்னை பேசவைத்ததோ, ஆட்டோ விட்டு இறங்கியதும் “பாத்துபோங்கண்ணா” என எது என்னை சொல்ல வைத்ததோ, அதுவே தான் என்னை இதை எழுதவும் வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.



21-03-2022

உன்மத்தன்

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

©2020 by Jerome. Proudly created with Wix.com

bottom of page