ஆச்சர்யத்தின் குடுவை
- Unmaththan

- Mar 5, 2022
- 2 min read
Updated: Mar 18, 2023

ஏழு வருடங்களுக்கு முன், ‘என் வீடு கூட உங்க வீட்டுக்கிட்ட தான். நான் இப்போ ரெண்டு பஸ் மாத்தி தான் போயிட்டு இருக்கேன். நீங்க S1ல தானே வறீங்க. அதோட டைமிங் சொன்னீங்கனா நானும் அதுலயே போயிருவேன். எங்க வீட்டுக்கு ஸ்ட்ரெய்ட் பஸ் அது’ வகுப்பு முடிந்து எல்லாரோடும் சேர்ந்து சாக்பீஸ் துகள்களும் வேகமாக கிளம்பிக்கொண்டிருந்த நேரம், வகுப்பின் மத்தியில் நின்ற அவளிடம், என் முதல் உரையாடல் இப்படியாக நிகழத் தொடங்கியது.
உண்மையிலுமே, அவள் கொஞ்சம் தயங்கித்தான் பேசினாள்; மலையாளம் திட்டுத்திட்டாய் தெரியும் தமிழின் சொற்களை பதட்டத்தில் நனைத்து பேசினாள். பதில் சொன்ன மறுகணமே, ஒளியின் வேகத்தை விட கூடக்குறைய இருக்கும் ஒரு வேகத்தில் கடந்து போனாள். அடுத்து மூன்று ஆண்டுகள் கழிந்த பின் தான், அவள் என் கவனத்தின் கண்ணாடியில் தெரிய ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு செமஸ்டரிலும் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து, ப்ராஜெக்ட் ஒன்று செய்ய வேண்டும். எல்லோருக்கும் குழுவொன்று அமைந்தபின், தனித்து எஞ்சியிருந்த நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழுவானோம். எங்கள் ப்ராஜெக்ட்டின் முழு வேலையும் அவள் ஒருத்தியே செய்துவிடுவாள்; நான் நினைத்தாலும் செய்ய இயலாது. என்னதான் ஆசைப்பட்டாலும், ஈரந்தோய்ந்த தீக்குச்சியால் பகலவனின் உஷ்ணத்தை உண்டாக்க முடியுமா என்ன?
முதல் தடவை போலன்றி, இந்த முறை தயங்காமல் பேசினாள். சிரித்து சிரித்து அவள் கண் அழுக கன்னம் சிவக்க பேசினாள். பேசினோம். என் ப்ரியப்பட்ட பெண், அவளுக்கும் நெருக்கமென்பதால் இன்னும் இன்னும் பேசிக்கொண்டோம். கல்லூரியின் நான்காம் ஆண்டு, ஆறு மாத பயிற்சிக்கு செல்லும் சமயம் வந்தது. முதல் கம்பெனி வருகிற முந்தைய நாள் சாயந்தரத்தில், மாதிரி நேர்காணல் ஒன்று வைக்கப்பட்டது. அது முடியும் போது, அவள் அழுதுகொண்டே வெளியே போனாள்; அந்த பொண்ணு திக்குது ரொம்ப. நாளைக்கு வர போறது பெரிய கம்பெனி; அதுல இந்த பொண்ணுக்கு வேலை கிடைக்கிறதுலாம் கஷ்டம். வாய்ப்பே இல்லனு கூட சொல்லலாம். இப்படி பேசிக்கொண்டிருந்த யாரும் அடுத்த நாள் அவள் நிகழ்த்தப்போகும் ஆச்சரியத்திற்கு தயாராக இருக்கவில்லை.
அவள் அதே கம்பெனியில், பெங்களூரில், வேலைக்கு சேர்ந்திருந்த சமயம், நானும் இரண்டு மாதங்களுக்கு பின் ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னிடம் ஒரு நல்ல லேப்டாப் இல்லாமல், என் வேலையின் முதல் மூன்று வாரங்கள் துயரத்தின் நிறத்தில் மினுமினுத்தது. மூன்றாம் ஆண்டில் குழுவின்றி தனித்த என்னை மீட்க வந்த அவளே தான், இம்முறையும், அவள் வாங்கியிருந்த புத்தம்புது லேப்டாப்பின் வழி மீட்க வந்தாள்.
ஒரு நாள் மாலை நெடுதூரம் (பெங்களூரில் எல்லாமே நெடுந்தூரம் தான்) பயணித்து என்னை பார்க்க வந்தாள். முதல் சம்பளத்தில் எனக்கு கொடுக்க, அவள் வாங்கி வைத்திருந்த, ஒரு பச்சை நிற Sony Headphone-யை என்னிடம் கொடுத்து போனாள். நகர்ந்து போனாள். தேய்ந்து போனாள். பேச்சுவார்தையற்ற வெளிக்கு போனாள். கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்த எங்கள் ஸ்நேகம் மீண்டும் ஆதிக்கட்டத்திற்கே போய் விழுந்தது. எந்த சர்ப்பம் தீண்டிற்றோ? நாங்கள் ஏறிய ஏணியே பெலமிழந்து முறிந்ததோ? கல்யாண்ஜி சொன்னது தான் எத்தனை உண்மை:
"இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்து விட நேர்கிறது
இன்னும் சிலவற்றை..!”
சில வருடங்களுக்கு முன் அவள் கொடுத்த Sony Headphone ஒரு பக்கம் உடைந்தது; பசை கொண்டு ஒட்டி வைத்து கேட்டேன், இசையில் எந்த பிசிறும் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முந்தி கூட, மீண்டும் உடைந்துவிட்ட அதை மீண்டும் ஒட்டிக் கேட்டேன்; இம்முறையும் இசை இசையாகவே கேட்டது. அந்த நாள்தோறும் எனக்கு இதுதான் தோன்றிக்கொண்டே இருந்தது; ‘இதே தானே நானும் அவளும். இதே தானே நானும் மற்றவர்களும். கொண்டு கொண்டாடிய ஸ்நேகம் ஒருநாளும் உடைந்து போவதில்லை. அது அதுவே தான். இசை எப்போதும் இசையாகவே இருப்பது போல’. கல்லூரியின் கடைசி நாட்களில் கூட நாங்கள் பழையபடியே பேசிக்கொண்டிருந்தோம். யாராவது ரகஸ்யமாக காதலித்து கொண்டால், யாராவது ஒரு பிறந்தநாள் கொண்டாட விரும்பினால், ‘ஹ்ருதயம்’ போலாவொரு படம் வந்தால் நாங்கள் எந்த தடையுமின்றி மகிழ்ந்தாடுகின்றோம்; வெளிச்சம் தான் வளர்ந்து தேய்கிறது - நிலா எப்போதும் கூடவே இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முந்தி கூட, பெரிதாக நாங்கள் பேசாத சமயத்தில், நான் ‘அலெக்ஸ்’ மேல் கொண்ட பேரன்பின் பொருட்டு, எப்படியோ கேட்டு கேட்டு, ஒரு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை கொண்டுவந்து நீட்டினாள். அவள் நிஜத்திலும், அதிசயங்களை செய்கிறவள்.
எந்த கம்பெனியில் அவள் சேர வாய்ப்பில்லை என மற்றவர்கள் நினைத்தார்களோ, அங்கேயே பெரிய பதவியில் சம்பளத்தில் இன்றும் ஆளுமை செய்கிறாள். இன்னும் நினைவிருக்கிறது, அந்த பெரிய கம்பெனியின் வாசலில் அவளை பார்க்க நான் காத்திருந்தது; முழுக்கை சட்டை போட்டு தலையை கோதி, கம்பீரமாக அவள் நடந்து வந்தது.
ஏழு வருடங்களுக்கு முந்தி எந்த நண்பர்களும் பெரிதும் இல்லாதவள், இன்று அவளை சூழாமல் சாராமல் எந்த நிகழ்வும் நட்பு வட்டத்தில் நடப்பதில்லை; இன்றைய தினத்தின் நட்பு மத்தியரேகை அவள். அவளின் இரு மெலிந்த கரங்கள் மீறி வழிகிற சிப்பிகள் எல்லாம், ஸ்நேகத்தின் கரையில் நின்று அவள் பொறுக்கி பொறுக்கி சேர்த்த ஜீவன்கள் தான். நான் சிப்பியாக இருந்திருந்தால், அவள் கைக்குள்ளேயே இன்னமும் தங்கியிருக்க கூடும்; என்ன செய்ய நானோ மணல், நான் வழிந்து போக சிறு விரலிடுக்கே போதுமானதாக இருந்தது.
அவள் ஒரு ஆச்சர்யத்தின் குடுவை; வளர்ச்சியின் அளவையும் கூட அவளே தான்.
உன்மத்தன்
05 - மார்ச் - 2022




Comments