தினமோ திசையோ தேவையில்லை தொழுகைக்கு
- Unmaththan

- Jun 13, 2021
- 1 min read
குறிப்பிட்ட தினமோ திசையோ தேவையில்லை என் தொழுகைக்கு; பார்வைபடும் பரப்பெங்கும் பரவிக்கிடக்கும் வானமும் பறவையுமே போதுமானவை. ‘Manifestation’ என்றொரு சொல்லிருக்கிறது; அதற்கு இந்த வானம் மேகம் பறவையை தாண்டி, வேறென்ன நியாயம் சேர்க்கமுடியுமென்று தெரியவில்லை. எத்தனையெத்தனை அரூப கண்ணாடிகளில் பார்க்க வைக்கிறது, பேரியற்கை; வெளுத்த நீலம், அடர் நீலம், கருமை பூத்த சாம்பல், தீராத சிவப்பும், தீர்ந்த சிவப்பின் ஆரஞ்சுமென கலர்கலராய் அத்தனை வானம்.
காற்று வீசவீச நெகிழ்ந்து போகிற மேகம், பேரலைகள் எழும்பிய நொடியை வரைந்து விட்டாற்போன்ற மேகம், பூதமாய் பல்லிளிக்கும் மேகம், புணர்ச்சி காட்டி புன்னகை சிந்தும் மேகம்; இப்படி அப்படியென எத்தனை ஓவியங்களை, ‘இந்தா பார் பார்’ என தூக்கிப் போடுகிறது.
பறவைகள் பேரதிசயங்கள். அவற்றை பார்த்துக் கொண்டிருப்பதே என் விருப்பமான தொழில். பெங்களூரில் அலுவலகத்திற்கு நடந்து செல்கையில், அத்தனை நெருக்கத்தில் தாழப் பறந்து போன அந்த முதல் பறவைதான், என் ஆதிச்சுடர்.
முதல்முறை நெருக்கத்தில் பறவையை, அதுவும் பறந்து கொண்டிருக்கும்போதே, பார்த்த நொடியில் பெயர் வைத்திராத உணர்வு உண்டாயிற்று. பின், அதையே, தொடர்ந்து தேடச் சொன்னது மனம். மதிய, வேளைக்குப்பின், மெல்ல வெயில் களைத்திருக்கும் போது, மொட்டை மாடியில் போய் படுத்துக்கொள்வேன்; வானத்தை பார்த்துக்கொண்டே இருப்பேன். பறவைகள் பறந்தபடி இருக்கும். அலாதி பேரின்பம்.
குரங்குப்பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுவோமே, அப்படியொரு பறவை பறக்கும். ரெண்டு எத்து எத்தியபின் தன்போக்கில் ஆடுமே ஊஞ்சல், அப்படி பருந்து பறக்கும். துடிதுடித்துக்கொண்டே சின்னச்சிறு சிறகசைத்து பறக்கும். ஆனால், எல்லாமும் பறப்பதை நிறுத்தாமல் பறந்து கொண்டே இருக்கும். இவற்றை பார்த்து கொடியில் போட்ட துணிகளும், ‘அவிழ்த்து விடு, நாங்களும் போகிறோம் பறக்க’ என மன்றாடும். கழுகு சில சிறகசைப்புப்பின் சொகுசாய் பறப்பதை இல்லை மிதப்பதைக் கண்டு, மற்ற பறவைகள் ஏதேனும் என்றேனும் பொறாமை கொண்டதுண்டா; என்றாவது ஒரு பறவையிடம் கேட்கவேண்டும்.
எல்லா பறவையும் அழகாக இருக்கின்றன. தயங்கி தயங்கி வந்து சீட்டு எடுக்காமல், வெறுமனே பறந்து போன கிளி, பந்தயமிட்டு பறந்த புறாக்கள், கூட்டுக்கு குச்சிகளை கொண்டு சென்ற பறவைகள், இரையை அலகில் கொத்தி பறந்த பறவைகள், சண்டைப்போட்டு விழுந்துருண்ட பறவைகள், கூட்டம் கூட்டமாய் கரைந்து திரிந்த காக்கைகள், குயில்கள், குருவிகள், மைனாக்கள் என அத்தனை பறவைகள் உதிர்த்துவிட்டு போன இன்பத்தின் இறகுகளும் பத்திரமாய் இருக்கின்றன. அருகே ஓயாமல் கேட்கிற, ஆம்புலன்ஸ் அலறலுக்கு, ஆறுதல் மருந்திடுகின்றன.
வைரமுத்து வரிகளை எடுத்துக்கொண்டு சொன்னால், ‘வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்’. மீண்டும் சொல்கிறேன், என் தொழுகைக்கு குறிப்பிட்ட தினமோ திசையோ தேவையில்லை; பார்வைபடும் பரப்பெங்கும் பரவிக்கிடக்கும் வானமும் பறவையுமே போதுமானவை.
உன்மத்தன்,
12 - 06 - 2021.




Comments