வண்ணதாசன் காலம்
- Unmaththan

- Jan 18, 2022
- 2 min read

வண்ணதாசனை பற்றி மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருக்க, பேசிக்கொண்டே இருக்க ஒரு காலம் வந்தபடியே இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில், நம் தெருக்கள் அமைதியாக இருக்கின்றன; பறவைகள் ஆதி மகிழ்வோடு பறக்கின்றன; நம் மன(நில/நல)ம் போர்க்களமாக மாறியிருக்கிறது; நம் சந்தோஷங்களை காலம் பிடுங்கிக் கொண்டது போல, நம் நாட்களின் ஸ்வாரஸ்யங்களை யாரோ தூரயெறிந்து விட்டது போல உயிர் சுருங்கி கிடக்க வேண்டியதாயிற்று. ஆனால் இதுதான், வண்ணதாசனை படிக்க உகந்த காலம்; கல்யாண்ஜி கவிதைகளில் கைவைக்க கச்சிதமான கணம்.

வண்ணதாசனை நம் ‘முந்தைய’ இயல்பு நாட்களில் படிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்திருக்க கூடும்; அன்றைய நம் அவசரத்தின் அன்றாடத்தில் அது சாத்தியமில்லை தான். இப்போது நிலையே வேறு. வாகனங்கள் வாசல் தாண்டவே தெருவில் சர்க்கார் நிற்காமல் இருக்கவேண்டும். வாழ்க்கை கொஞ்சம் மெதுவாகியிருக்கிறது. ரசித்த எல்லாம் சலிப்பின் சந்நிதி தொட்டு நிறைய நாளாகிறது. இந்த புள்ளியில் தான் நீங்கள் வண்ணதாசனை இறுக பற்றி கொள்ள வேண்டும். இரண்டு மூன்று முறை ஒரு பத்தியை படிக்க நேரமிருக்கிறது; பொறுமையிருக்கிறது; பறவை பறக்க, மரங்கள் ஆட, அதை நீங்கள் பார்க்க சூழல் ஏதுவாகியிருக்கிறது. நீங்கள் இலகுவாக வண்ணதாசனை படிக்க எல்லாம் கூடிவந்திருக்கிறது.
பாத்திரம் கழுவ இறைக்கிற நீர் பாய்ந்தோடி, நீங்கள் எச்சிலென்ற மிச்ச தக்காளியை

கருவேப்பிலையை ஆரத்தழுவதை பார்ப்பீர்கள்; ‘ஹே மேல மேல விழாம அந்த பக்கம் போவேன் கொஞ்சம்’ என தென்னங்குருத்துகள் பேசுவதை கேட்பீர்கள்; ‘அப்பறம் என்ன, கையை நீட்டி பறக்கவரலாம்ல மேல’ என பறவைகள் கூப்பிட்டதாக நினைத்து கை நீட்டுவீர்கள்; கொஞ்ச நேரத்தில் உங்கள் அறையில், ஆறோடும் சப்தம்வரும்; அந்த படித்துறையில் மேலேற்றி சீவிய தலையோடு வண்ணதாசன் இயற்கையாடி கொண்டிருப்பார்; பின், நீங்கள் வண்ணதாசன் ஆயிருப்பீர்கள்.
முக்கியமாக, திருப்புமுனைக்கு ஏங்காமல், நிகழை நேசிக்க ஆரம்பித்திருப்பீர்கள். அவருடைய

கதைகள் அப்படித்தான்; பெரிய திருப்புமுனைகள் தேடி, வேக ஓட்டமெல்லாம் இருக்காது. சார், அடுத்து என்னாச்சு பெரியம்மைக்கு என நீங்கள் திகிலோடு வாசிக்கிற வரிக்கு அடுத்த வரியே, ‘அதுலாம் பாக்கலாம், மொதல்ல இந்த பூவை பாரேன்.’ என மெல்லமாக நடக்க வைப்பார். ‘நீண்டு ஒடுங்கிய ஏமாற்றமாக நகர்ந்து கொண்டிருந்தது ஆறு’, ‘எனக்கு இருக்கும் இறந்தகாலம் போல பறவைக்கும் இருக்கும் அல்லவா ஒரு பறந்த காலம்’, ‘நிலா, ஐஸ்கட்டி உறைவுடன் இருளின் குவளைக்குள் மிதந்தது.’ ‘சூரியனை எட்டிப்பார்க்கிற ஸ்டுடியோ திரைச் சீலைகள்’, ‘நிலையம் நீங்குகிற ரயில்போல நகத்தில் நகர்ந்த மசி’ இப்படி அவர் காட்டுகிற காட்சிகள் நம்மை அசத்திப் போனால், ‘எச்சமும் பூவே பூவும் எச்சமே’ என அடுத்த வரியே நம்மை அசைத்து போகும்.
இது வண்ணதாசன் காலம்; வண்ணதாசனை படியுங்கள்; இரண்டு மூன்று முறை முயன்றும் படிக்க
முடியாவிட்டால், மேஜையில் வைத்து விடுங்கள்; ஒருநாள் அவரே கூப்பிட கூடும்; அப்போது படியுங்கள், இயற்கையாடுவீர்கள். முடிந்தால், ‘ஒரு சிறு இசை’ நூலில் இருந்து முயற்சிக்கலாம். ‘மலர் ஒன்று வீழ்ந்தால் அதையேந்த பலர் ஓடுவார். சருகுகள் வீழ்ந்தால்.. ‘ என நா. முத்துக்குமார் எழுதியிருப்பார். பலர் வராவிட்டாலும், சருகுகளை ஏந்த வண்ணதாசன் கை நீண்டு வரும்; இந்நேரம் வந்திருக்கும்.
18-01-2022
உன்மத்தன்






Comments