மதங்களிடமிருந்து உங்கள் கடவுள்களை பிரித்து கொள்ளுங்கள்
- Unmaththan

- Jun 4, 2022
- 2 min read

“கர்நாடகாவின் வடமேற்கு ஊர் ஒன்றில், வீரய்யன் என்கின்ற தெய்வத்தை வழிபடுகிறார்கள் மக்கள். வெளியூரில் இருந்தும் அதிக பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோயிலின் விசேஷ நாட்களில் வருகிற காணிக்கை, திருப்பதியையே முந்திவிடுவதாக தரவுகள் சொல்கின்றன. இந்த ஸ்தலத்தின் சிறப்பு என்னவென்றால், யாரும் பணத்தையோ வேறு பொருட்களையோ காணிக்கையாக தருவதில்லை. அவரவர் வசதிக்கேற்ப தங்கத்தை உருக்கி சிறுசிறு வடிவில் அந்த கோவிலுக்கு காணிக்கையாக தந்து வருகிறார்கள்.“ இதை இப்படிச் சொல்லி இருந்தால், ஒருவேளை இது பக்தி புராணமாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, காணிக்கைக்கு தங்கத்தை சேர்க்க இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், திரைமொழியில் வந்துவிட்டதால் அது KGF திரைப்படம் என்றளவில் நின்று கொண்டது; சந்தோஷம்.
“ஆதியிலே வார்த்தை இருந்தது. - யோவான் 1:1”
நான் மேலே சொன்னது KGF படத்தின் கதையைத்தான். இந்த படத்தில் என் கவனம் அதிகம்

விழுந்தது, அதில் வருகிற கதைசொல்லிகள் மற்றும் அதை நம்பி கேட்பவர்கள் மீது; அதிலும் குறிப்பாக அந்த பத்திரிக்கை ஆபீஸில் டீ கொடுக்கிறவர் மீது. படம் முழுக்க அத்தனை கதை சொல்லிகள் நிரம்பியிருக்கிறார்கள். எழுத்தாளர், அவரின் மகன், ஒரு பைத்தியக்காரன், சிறுவர்கள் இப்படி பல்வேறு கதை சொல்லிகளால் படம் நகர்ந்து செல்கிறது.
ஆரம்பத்தில் பயந்தவராக காட்டப்படுகிற ஆபீஸ் உதவியாளர், கதையை கேட்க கேட்க அவர் தன் பயத்தை சர்ப்பம் தன் தோலை

கழற்றுவது போல், படிப்படியாக கழற்றி எறிகிறார். யாரை பார்த்து பயந்தாரோ அவர் முன்னாலேயே தன் குரலை உயர்த்துகிற அளவுக்கு பாதிக்கதையிலேயே மாறிவிடுகிறார். இன்னும் கதைக்குள் போய் போய், அவர் தன் நிலத்தை மொழியை நினைவை எல்லாம் துறந்து விடுகிற புள்ளியை அடைகிறார்; சுத்தியலாக, தன் கையில் இருப்பதை நினைத்து கொள்கிற தன்மை அங்கிருந்து தான் வரக்கூடும். இந்த புள்ளியில் தான் இன்னும் ஒரு படி மேலே போய், கதை சொல்கிறவரையே, “சார், தப்பா

ஏதோ சொல்றீங்க; அவன் அப்படிலாம் பண்ணிருக்க மாட்டான்” என உறுதியாக மறுக்க ஆரம்பிக்கிறார். சந்திரமுகி கங்காவை அடைந்ததும், உங்கள் கடவுள்கள் உங்களை அடைந்ததும் கூட இதே கதைகளின் வழியே தான். கதை என்பது ஒரு நுட்பமான செயல்முறை; பல அதிசயங்களை அக்கிரமங்களை அதனால் மிக எளிதில் நிகழ்த்தி விட முடியும்.
“வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது - எபிரேயர் 4:12”
இதே KGF கதை, படமாக பரவாமல், ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதென உங்கள் தாத்தாவுக்கு தாத்தா சொல்லி பரவியிருந்தால், ராக்கி என்கிற வீரய்யன் என ஒரு தெய்வமும் மதமும் இந்நேரம் உருவாகியிருக்க கூடும் என்கிற போது; இப்போதிருக்கும் நம் கடவுள்களும் கூட ஏன் இப்படி வந்தவர்களாக இருக்க கூடாது என நாம் கேட்டால், அது பிழையா? இந்த கதையில் உங்கள் கடவுளின் கதையையும் வைத்து பாருங்கள் கணக்கெல்லாம் சரியாக வரும்; அடிமைப்பட்ட இனத்தவர்களை மீட்க மீட்பர் வந்தார்; இரத்தம் சிந்தினார் அல்லது தந்திரமாக போர் செய்து அரியணை கைப்பற்றினார்; எப்படி சொல்லி பார்த்தாலும் நம் எல்லா கடவுளுக்கும் இது ஏதாவது ஒரு வகையில் சரியாக வரும்.
உங்கள் கடவுளை உங்களிடம் பறித்து கொள்வது அல்ல நோக்கம்; மாறாக, உங்கள் மதங்களிடமிருந்து உங்கள் கடவுள்களை பிரித்து கொள்ளுங்கள் என்பதுதான். நீங்கள் வேறு நிலத்தில் சூழலில் பிறந்திருந்தால், வேறு கதைகளை கேட்டு வளர்ந்திருப்பீர்கள். அப்போது, நீங்கள் இன்று எதை பெருமையாக பேசுகிறீர்களோ அதற்கு நேரெதிராகவே நின்றுயிருப்பீர்கள். இப்போது நீங்கள் கொண்டாடுகிற மொழியை கேலி செய்திருப்பீர்கள். இப்போது நீங்கள் வழிபடுகின்ற மதத்திற்கு எதிரில் நின்று இருப்பீர்கள்; உங்களின் இன்றைய கோயிலை உங்கள் கைகளாலேயே இடித்திருப்பீர்கள்.
நண்பர்களே, உங்கள் மொழி கடவுள் மதம் அடையாளம் என்கிற யாவும், உங்களுக்கு சொல்லப்பட்ட கதையே அன்றி வேறில்லை. “வார்த்தை , இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; - எபிரேயர் 4:12”
உன்மத்தன்
4th June 2022




Comments