கைலாசா
- Unmaththan

- Jul 7, 2022
- 2 min read

ஏழெட்டு வருடங்களுக்கு முன், ஸ்டீபன் திருட்டுத் தனமாக வகுப்புக்கு கொண்டுவந்திருந்த ஃபோனில் "ஜிகுஜிகு" என்ற ஒலிக்கு நித்தியானந்தா ஆடுவது போன்ற சித்தரிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். அதற்கு ஒருசில வருடங்களுக்கு முன், கோயிலில் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கையில், சாபு அண்ணா, 'பேசுறது தான் தம்பி ரொம்ப முக்கியம். நித்தியானந்தா பேசுறத ஒரு அரைமணிநேரம் கேட்டா நீயே காவி துணிய கட்டிட்டு பின்னாடி போயிருவ' என சொல்லியபடியே டீயை குடித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து இன்னும் சில வருடங்கள் முன்னே போனால், அன்றிரவு நித்தியானந்தா பற்றிய சர்ச்சை வீடீயோவை சன் நியூசில் எப்படி பார்ப்பது என திட்டம் போட்டு, தோற்றபடி உறங்கிப்போனேன். இந்த மூன்று சம்பவங்களுக்கு பின் நான் அந்த பெயரையே மறந்து போயிருந்தேன். அதற்கு பின், 'கைலாசா' பிரபலமான போதுதான் எனக்கு நித்தியானந்தாவின் மறு அறிமுகம்.
கடந்த ஓரிரு வருடங்களில் எல்லா பக்கமும் நித்தியானந்தா முகமும் குரலும் சிரிப்பும் தான். அது வெறும் கேளிக்கை பொருளாகவே இருந்தது, நேற்றவரை; DISCOVERY வெளியிட்ட நித்தியானந்தா ஆவண(ணவ) படத்தை பார்க்கும் வரை. பல திகிலூட்டும் செய்திகளோடு பக்கங்களோடு சேர்த்து என் அறியாமையையும் கண்டுகொண்டேன். எப்படி இந்த ஆள் இவ்வளவு காரியங்களையும் செய்துவிட்டு, கைலாசா பற்றிய விளம்பரங்களை, எந்த தயக்கமுமின்றி பரப்பிக் கொண்டிருக்கிறான். இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தனக்கென எப்படி உண்டாக்க முடிந்தது? இந்த கேள்வி பின்வரும் நான்கைந்து புள்ளிகளுக்கு என்னை கொண்டு நிறுத்தியது.
1) முதலில், தான் மட்டும் தான் உங்கள் உலகின் மையம் என நம்மை நம்ப வைப்பது. இது வெறுமனே நித்தியானந்தா போன்றவர்கள் மட்டுமே செய்வதில்லை. எல்லா மதங்களும் முதலில் இதைத்தான் பரப்புகின்றன; பைபிளில் முதல் கட்டளையாக சொல்லப்படுவதும் கூட இதுவேதான்: "உனக்கு கர்த்தாவாகிய சர்வேஸ்வரன் நாமே; நம்மைத் தவிர வேறு கடவுள் உனக்கு இல்லாமல் போகட்டும்." [யாத்திராகமம்/விடுதலைப் பயணம் 20:3 மற்றும் உபாகமம்/இணைச்சட்டம் 5:7] ஏனைய மதங்களும் இதையே தான் சொல்கிறது. ஏன், நாம் சொல்கிற அதீத அன்பு, பற்று எல்லாமும் கூட இந்த கருத்தின் மேல் தான் இயங்குகிறது.
2) கதைகளை உண்டாக்குவது. (பாபநாசம் படத்தில்) சுயம்புலிங்கம் தியானத்துக்கு போனதாக நம்ப வைக்கிற அதே யுக்தி தான் இங்கேயும். நித்தியானந்தாவை ஒரு உதாரணத்திற்கு பார்ப்போம்; முதலில் தான் ஒரு சிவ அவதாரம் என பரப்பியிருந்ததால், தன்னை எதிர்ப்பவர்களை அரக்கர்களாகவும், தான் புணர விரும்புபவர்களை சக்தியின் அவதாரமாகவும் நம்பவைத்து, மிக எளிதில் தனக்கு வேண்டியதை சுமூகமாக நடத்தி கொள்ள முடிந்திருக்கிறது.
3) அவர்களுக்கு மற்றவர்களை விட நாம் தான் ஒசத்தி என்ற தோற்றத்தை உண்டாக்குவது. "Good boy/girlல ஆ..காட்டு" என எளிதாக நம்மால் சோறூட்ட முடிவதும் கூட அதனால் தான்.
4) கடைசியாக, அதிக வேலைப்பளு, தூக்கமின்மை மூலம், இது குறித்தெல்லாம் பகுத்தறிவுடன் யோசிக்க விடாமல் தடுப்பது.
இவையெல்லாவற்றையும் மிஞ்சிய ஒரு ஆயுதம் கூட மிச்சமிருக்கிறது; அது. வெறுப்பை உண்டாக்குவது; ஒருவரை இன்னொருவரிடமிருந்து பிரித்து காட்டுவது. உதாரணத்திற்கு, நித்தி ஆசிரமத்தில் நெடுநாள் இருந்தவர் ஜான்சி ராணி. ஒருநாள் நித்திக்கு எதிராக அவர் பேச நேர்கையில், அவ்வளவு நாள் பக்தையாக இருந்த அவரை(ஜான்சி ராணி) சடாரென, "கிறிஸ்தவ கைக்கூலி, இந்து மதத்தை அழிக்கிற சக்தி" என்ற போர்வைக்குள் அவரை எளிதாக தள்ளிவிட்டுவிட்டு, நித்தியால் தப்பிக்க முடிந்தது கூட இந்த ஆயுதத்தை பயன்படுத்தி தான்.
நான் முன்பே சொன்னது போல, இது நித்தி மட்டும் செய்ததோ / செய்வதோ அல்ல. அது யார் யார் என அடையாளம் காண்பது அவரவர் பாடு. ஆனால் நண்பர்களே, நம் கடவுள்களை முன்னிருத்தி தான் நம்மை ஏமாற்றப் போகிறார்கள். நாமும் ஏமாறப்போகிறோம்.
உன்மத்தன்
06 - 07 - 2022




Comments