இது "ன்-றி-ப"
- Unmaththan

- May 29, 2022
- 1 min read

அவளுக்கு அந்த கறியை கூடுதலாக பிடிக்கும். அவளுக்காக அவன் அதை வாங்கிக்கொடுப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். என்ன கறி அது என நான் கேட்டால், அவள் ஒருவித கூச்சத்தோடு “இது ன்-றி-ப” என்பாள். “ப” ஆதியில் வராமல் அந்தியில் வரும்படி அந்த சொல்லை அவள் சிதைத்துவிடுகிற சூட்சமம் எனக்கு ஆரம்பத்தில் புரிந்ததே இல்லை. “அது என்ன ன்-றி-ப, பன்னி கறின்னு சொல்லவேண்டிதான” என நான் கேட்டால், மௌனத்தை பதிலாக்கிவிட்டு கறியை அசைபோட ஆரம்பித்திருப்பாள். நாட்கள் போக போக, சமூகத்தில் கலக்க கலக்க, அவளிடம் பன்றி ஏன் “ன்-றி-ப” ஆனது; அவளிடம் பதில் ஏன் மௌனமாகவே இருந்தது என ஓரளவு விளங்கியது.
பெருமாள் முருகனின் “மாதொருபாகன்” படித்துவிட்டு ஒருவித மயக்கத்தில், தவிப்பில் இருந்த சமயம், அவருடைய அடுத்தடுத்த புத்தகங்களை வாங்கிசேர்த்தேன். அதோடு அவ்வளவுதான். பின்னொரு சமயம், அதே பெருமாள் முருகன் எழுதி T.M.கிருஷ்ணா பாடிய “நீ மட்டுமே என் நெஞ்சில்” பாடலை கேட்டுவிட்டு ஒருவித மயக்கத்தில், தவிப்பில் இருந்தேன். இன்றும் அதே மயக்கத்தில், தவிப்பில் இருக்கிறேன்; காரணம், பெருமாள் முருகனின் இரண்டு சிறுகதைகளை தழுவி அவரின் வசனங்களிலேயே தாவியோடி வந்திருக்கிற “சேத்துமான்”.
படத்தின் ஒவ்வொரு வசனத்திற்கும் காட்சியமைப்பிற்கும் “அட..” கொட்டாமல் படத்தை தொடரமுடியவில்லை. “இல்லாதவன் சலிப்புக்கு ஆயுசு ஒருநொடிதான்” என சுடுகின்ற வசனம் மட்டும் இல்லாமல், “நீ எந்திரிக்கலேன்னு சூரியன் கோச்சுக்கிட்டு மேல போயிருச்சு பாருய்யா; காக்கா குருவில்லாம் காலைல உன்ன கேட்டுச்சு, நீ தூங்குறன்னு சொன்னதும் பறந்து போயிருச்சு; ராத்திரி முழுக்க பள்ளிக்கூடம் பூட்டியே கிடந்து மூச்சுமுட்டியிருக்கும், நீதானா சாமி சீக்கிரம் பொய் தொறந்து விடனும்” இப்படி காலையில் நீண்ட நேரம் தூங்குகிற பேரனை எழுப்பிக்கின்ற அழுகு வசனங்களும் படத்தில் நிறைந்து இருக்கின்றன.
படத்தில் எனக்கு கூடுதலாக பிடித்தது அந்த பேரனை காட்டியவிதம். அல்லது அந்த கதாபாத்திரத்தின் வழி என் பால்யத்தை பார்த்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக கூட இருக்கலாம். வீட்டில் யாராது வெளியே வேலைக்கு போகையில் “என்னையும் கூட்டிட்டு போங்களேன்” என அடம்பிடிக்கிற சிறுவனை, போன இடத்தில் செய்கிற எடுபுடி வேலையை ஒரு விளையாட்டாக கற்பனை செய்து வேலை செய்கிற சிறுவனை, திரையில் பார்த்த நினைவேயில்லை. சரி, பன்றியின் துடிக்கிற குரலை இதற்குமுன் தமிழ் திரையில் பார்த்திருக்கிறீர்களா?
நண்பர்களே, பன்றி “சேத்துமான்” ஆகியிருந்த புள்ளியில், நான் அந்த கருப்பு வாட்ச் அணிந்த சிறுவனாக மாறியிருந்தேன். ஒன்றிலிருந்து மற்றொன்றாக மா(ற்)றுகி(ன்)ற ரசவாதத்தை நிகழ்த்துவதுதானே சினிமா உட்பட ஏனைய கலைகளும்.
29-Sun-2022 உன்மத்தன்




Comments