இக்கரைக்கும் அக்கரைக்கும் எப்போதும் TRAFFIC தான்
- Unmaththan

- Aug 15, 2021
- 3 min read

அப்பாவுடன் ஒரு நாள் டி.வி,எஸ்ஸில் பீளமேடை கடக்கும்போது, ‘இந்த காலேஜ் பாலம் கட்டுனப்போ நான் வேலசெஞ்சுருக்கேன்; இப்போ இருக்க பாலம் இல்லை; இதுக்கு முன்ன இடிஞ்சு விழுந்த பாலம்’ என அப்பா சொல்கையில் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு சின்ன சந்தோஷத்தை கொடுத்த பாலம் அது. ‘பாலம் கட்டல; ஸ்கூல்க்குள்ள சென்டரிங் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்’ என அடுத்த கணமே சந்தோஷத் திமிரை அப்பா உடைத்தும் அதே பாலத்தின் அடியின் தான்.
கல்லூரியின் எதிரே இருந்த பள்ளியில் பதினொன்று பன்னிரண்டு வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், கல்லூரிவாசிகள் எல்லோரும் சொகுசாக பாலத்தில் சாலையை கடந்துவிட, ‘கொடுத்து வச்சவனுங்க பாரேன்; ஜாலியா கிராஸ் பண்ணி போறாங்க’ என பாரமான புத்தக மூட்டையோடு, சாலையின் நடு சுவற்றில் கைவைத்து எகிறி குதித்துத் தாண்டியபோது, ஆச்சர்யப்பட, பொறாமைப்பட வைத்த பாலம் அது.
ஒருநாள் வாசற்காவலர்கள் இல்லாத பொழுதொன்றில், யார் கண்ணிலும் படாமல், கல்லூரிக்கு திருட்டு தனமாக சென்று டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட சாப்பிட, ‘தம்பிங்களா ஸ்கூல்ல இருந்து இங்கெல்லாம் வரக்கூடாது. யாரது பாத்தா எங்களை தான் திட்டுவாங்க. சீக்கிரமா சாப்பிட்டு ஓடிருங்க’ என கேண்டீன் அக்கா சொல்ல, சாகசம் செய்துவிட்ட பரவசத்தில் அடுத்த ஒரு மாசம் கழிக்க வைத்த பாலம் அது.
‘இப்போ இந்த அவினாசி ரோட்ல வண்டிலாம் போகுதே, அதுல ஒருநாள்ல எத்தனை ஆக்சிடெண்ட் ஆகும்னு சொல்றது தான், ப்ராபபிலிட்டி’ என கணக்கு வாத்தியார் தட்சிணாமூர்த்தி எங்களுக்கு probability புரியவைக்க கற்பனையில் நிகழ்த்திக்காட்டிய விபத்துகள் மட்டுமின்றி; பின்னாளில் ‘ஹெல்மெட் போடல சரியான அடி; பின்னாடி வந்த காருக்காரன் மேல தப்பில்ல’ என நிஜத்தில் பயமுறுத்திய விபத்துகளுக்கும் சாலையில் சாட்சியாய் நின்ற பாலம் அது.
கோவையின் வேறொரு சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க, ‘ச்ச அங்கயே இடம் கெடச்சுருந்தா பிரிட்ஜெல்லாம் இருந்துருக்குமே’ என மனமுடைந்து, பின் நம்ப முடியாமல் இந்த கல்லூரியில் இடம் கிடைத்ததும் ‘ஒரு வழியா வந்துட்ட போலேயே, உனக்கு அடிச்சிருக்கு பாரு லக்கு’ என மௌனமாக கண்ணடித்து வரவேற்ற பாலம் அது. கல்லூரி சேர்ந்த ஆரம்பத்தில், பள்ளி ஆசிரியர்கள் நண்பர்கள் சந்திக்க வந்திருந்தால், பள்ளியின் உள்ளே அவர்கள் நின்றிருக்க, ஒரு மகா பேரின்பத்தோடு என்னை நடந்து வர வைத்த பாலம் அது.
கல்லூரி வாழ்வின் முதல் புகைப்படத்தை சக தோழர்கள் சேர்ந்து, நாற்பது பேராக நின்று எடுத்தது அதன் ஒரு அடிவாரத்தில் தான். கிட்டத்தட்ட கடைசி புகைப்படமும் அங்கு எடுக்க பட்டபோது, சிலர் குறைந்திருந்தாலும், எங்களுக்கு தெரியாமல் எங்களுடனேயே பின்னிருந்து புன்னகைத்த பாலம் அது.
கட்டாயம் இந்த கல்லூரியில் இந்த பாலம் இருந்த காலத்தில் படித்த எல்லோருக்கும், வெளியூர் சென்று வரும்போதெல்லம், இந்த பாலத்தை பார்த்தவுடன் தான் ஊருக்கு வந்து விட்ட பூரண மகிழ்வே வரும். பலவருடங்கள் கழித்து கல்லூரி வருகிற ஜீவன்கள் எல்லாருக்கும் அரூப பன்னீர் தெளித்து வரவேற்பதும், எல்லாரும் தவறாது எடுத்துவிடுகிற புகைப்படமாகவும் இருந்த பாலம் அது. கல்லூரியை பார்த்தேன் என்பதற்கான ரசீதே பாலத்தின் புகைப்படம் தான்.
நெருங்கிய சகா ஒருவன், வேலைக்கான முதன் நேர்காணலில் தோல்வியை தழுவிய பின், நடுராவில் கால்களை தொங்கப்போட்டு பேசிக்கொண்டிருந்தது அந்த பாலத்தின் மேல் தான்; அவன் தோள்மேல் கைபோட்டு ஆறுதல் கதகதப்பை கொடுத்து பேசிக்கொண்டிருந்த பாலம் அது. ஹாஸ்டல் ஜீவன்கள் பெரும்பான்மையினர், காலையில் தப்பிப்பிழைத்து ஓடிவந்து அட்டெண்டெண்ஸ் வாங்க காரணமாக இருந்த பாலம் அது. துடுப்புமில்லாமல் துடுப்பிடுபவனுமில்லாமல் சகல மனிதர்கள் பயணித்த தோணி, அந்த பாலம். மற்ற பாலங்களை பற்றி எனக்கு தெரியாது; ஆனால் இது சத்தியமான பாலம்; அணில்கள் போல் துள்ளி குதித்து நாங்கள் ஓடியாடிய பாலம் அது.
ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு தொடங்கும் முன், எச்.ஓ.டி, ஆசிரியர்கள் யாரும் பார்க்கும் முன் மடமடவென ஓடி ஹாஸ்டல் அடைய காரணகர்த்தாவாக இருந்த பாலம் அது. பாலத்தின் படியில் ஏறுகையிலும் இறங்கையிலும், அதுவரை வெளிவந்த எல்லா ஹிட் பாடலும் மனதில் ஒலித்தபடி இருக்க, கற்பனை நாயக நாயகிகளாக எங்களை மாற்றி அழகுபார்த்த பாலம் அது.
‘பிரிட்ஜ் கிட்ட இருக்கன் வந்துரு’ ‘கரெக்ட்டா பிரிட்ஜ்க்கு கீழ நிக்குறன்’ ‘எங்கடா நிக்குற; ஓ பாத்துட்டன் பாத்துட்டன் உன்ன’ ‘பிரிட்ஜ் கிட்ட நைட் வந்துருங்க, அங்க இருந்து தான் நம்ம ஐ.வி பஸ் கிளம்பும்’ ‘அண்ணா, பிரிட்ஜ் கிட்ட கொஞ்சம் ஸ்லொவ் பண்ணுங்க இறங்கிக்கறேன்’ என எப்போதும் எல்லாருக்கும் அடையாளம் சொல்ல தோதுவாக இருந்த பாலம் அது. பலர் தங்கள் நண்பர்களை, கல்லூரி கடைசி நாளில் பஸ் ஏற்றி விட்ட இடமும், அவர்களோடு சேர்ந்து மௌனமாய் கண்கள் நனைத்துக் கொண்டதும் அதே பாலம் தான் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் எல்லாருக்கும் நிழலையும் குடையையும் கொடுத்த பாலம் அது.
‘சின்ன வயசுல இருந்தே அந்த பிரிட்ஜ் பிடிக்கும். அதுக்கு தான் இந்த காலேஜ் சேர்ந்தேன்’ ‘ரெண்டு நாள் முன்ன கூட போனன்; ஆனா அதான் கடைசியா இருக்கும்னு தெரில’ ‘முழுசா இடிக்கிறக்குள்ள ஒருவாட்டி பாத்துட்டு வந்துரலாமா’ இப்படி நண்பர்கள் துக்கம் அனுசரிக்கும் பாலம் அது.
சுந்தர ராமசாமியின், ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை போல தான், இந்த ‘ஒரு பிரிட்ஜ்-ன் கதை’ உணர்வும் கூட. சகல மாற்றங்களை மௌனமாய் பார்த்த ஒற்றை சாட்சி தான், அந்த பாலம். சாலையின் ஒருபுறமிருந்த ஸ்கூலிலிருந்து மறுபுறமிருந்த கல்லூரிக்கு நான் இடம்பெயர காரணமான எல்லாரின் சாயலும் எனக்கு அந்த ஒற்றை பாலத்தில் தெரியும். ‘நாங்க படிக்கிறப்போ இங்க ஒரு பாலம் இருக்கும்’ என நினைவில் உடைபடாமல் இருக்கப்போகும் பாலத்தில், அனைவரின் கைத்தடமும் கால்தடமும் இல்லாமலா போகும்!
உன்மத்தன்
14--20201




Comments