top of page

நகத்தடமே


எங்கள் வீட்டு சுட்டிபையன் என்றும் கூறலாம்; வயதிலோ அல்லது உருவத்தில் குட்டிப்பையன் என்றும் கூறலாம்; அதனாலேயே அவன் எங்கள் பாட்டிக்கும் செல்லப் பையன் (இது மிகவும் அரிது). 4 Dec 2019, அன்று நான் கல்லூரியில் இருந்து, பாட்டி வீட்டுக்கு வழக்கம் போல வருகையில், வெளியே ஒரு கம்பி கூண்டில் ஒரு குட்டி புது வெள்ளை நாய்; சிவப்பு பெல்ட்டுடன் இருந்தது; பார்த்ததும் ரொம்ப குஷியாகி வீட்டிற்குள் நுழைய நுழைய, பிரவீன், ‘வெளியே ஒருத்தன் இருக்கிறான் பார்த்தியா” என்றான். நானும் கொஞ்ச அதிக பூரிப்பில், “ஆமா ஆமா, யார் அவன்; எங்க இருந்து வந்தான்” என்கிறேன் (ஏன் இந்த பூரிப்பு என்றால், ஆல்ஃபா வருகையில் அது மூன்றாவது நாய்; கருப்பு மற்றும் பிரவுனி ஏற்கனவே இருந்தன. ஆனால், அவை அதிகமாக கட்டிப்போட்ட நிலையிலேயே இருப்பதால், விளையாட புது ஆள் வந்துவிட்டான் என்பதை உணர்ந்ததால்).


பிரவீன் யாரோ ஒருவரின் பெயரைச் சொல்லி. அவரால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் நான் தூக்கி வந்துவிட்டேன் என்றும் சொன்னான். பெயர் கூட ஆல்ஃபா என்று வைத்து விட்டேன் என்றும் சொன்னான். உடனே துணியெல்லாம் மாற்றிக்கொண்டு, ‘சரி வாங்க ஆல்ஃபாக்கு ஏதாவது கொடுக்கலாம்’ என்றேன். ஆனாலும் ஒரு பயம், புது இடமாக இருப்பதால் சாப்பிடாமல் போவானோ; இல்லை கூண்டைத் திறந்து விட்டால் ஓடி விடுவானோ என்று. சத்யப்பிரியன் அண்ணனோடு சேர்ந்து, முதலில் பிரட் கொடுத்து பார்த்தோம். ரெண்டு மூன்று துண்டுகளை வேகமாக சாப்பிட்டான். உடனே நான், ‘ஐயோ பாவம் எவ்வளவு பசி. இன்னும் கொடுக்கலாம், பால் கொடுக்கலாம், பிஸ்கட் கொடுக்கலாம்’ என்று கொடுத்துக் கொண்டே இருந்தோம். பால் ஊற்றியதும் குடித்துவிட்டான்; சரி என்று அடுத்த 10 நிமிடங்களில் பால்சாதம் கொடுத்தோம்; அன்னப்பறவை போல் பாலை உரிந்து குடித்துவிட்டு, சாப்பாடு மிச்சம் வைத்து விட்டான்; அடுத்து கொஞ்ச நேரத்தில் பிஸ்கட்டையும் தின்று தீர்த்தான். அப்போதுதான் தெரிந்தது, அவன் எப்போ எதைக் கொடுத்தாலும், கொலப்பசிக்காரன் போல சாப்பிடுவான் என்று. ஆனால் இதற்கு சம்மந்தமே இல்லாமல், தலைகீழா இருக்கும் அவன் பிம்பம். ஆல்ஃபா தண்ணி நிறைய குடிப்பான்; எப்போது தண்ணீர் கொண்டு போனாலும், அந்தப் பாத்திரத்தையே காட்ட சொல்லி நன்றாக குடிப்பான். அதுவே, எனக்கு அனைத்து நாய்களுக்கும் தண்ணீர் ஊற்றும் ஆர்வத்தை கொடுக்கும்.


அவன் சிவப்பு காலர் கொஞ்ச நாளில், போன் டாலர் உள்ள ஆரஞ்சு காலர் ஆக மாற்றப்பட்டது; சத்யப்பிரியன் அண்ணாவால். எல்லோருக்கும் இவன் மீது அத்தனை பிரியம், பாட்டி முதற்கொண்டு; எது வாங்கி வந்தாலும், இவனுக்கே முதல் உரிமை, அதிக பங்கும். இவன் வந்து பத்து நாளில் பெரியப்பா இறந்து போக, நாங்கள் திருப்பூர் சென்று விட்டோம். அந்த நாட்களில், பாப்பாதான் ஆல்ஃபாவை பார்த்துக் கொண்டார். நடுவில் ஒரு நாள், ஏதோ சம்பிரதாயத்திற்காக‌ பாட்டி வீட்டுக்கு வரும்போது, வாசலில் பாப்பா ஆல்ஃபாவை கட்டி வைத்திருந்தது; பாத்தவுடனே மனசு ஏதோ சரியில்லாமல் ஆக,, ஓடிப்போய் ஆல்ஃபாவை கொஞ்சிக் கொண்டேன், அதுவே எனக்கான சம்பிரதாயம் போல. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த என் விருப்பத்துக்குரிய மாமாவிடம், வாரம் ஒன்றாகும் முன்பே, நல்ல பெயரையும், கையோடு நல்ல போட்டோவையும் வாங்கிவிட்டான் ஆல்ஃபா.


நாட்கள் தீர தீர, ஆல்ஃபாவுக்கு உற்சாகமும், எங்கள் உடனான நெருக்கமும் இன்னும் ஊறத்துவங்கியிருந்தது. Intern பொருட்டு, இடம் பிரியும் பொழுதுவர, எப்போதையும் விட இப்போது கூடுதல் சுமை, ஆல்ஃபா என்னை மறந்து விடுவானோ என்று. கிளம்பும் முன் 'Bye' சொன்னேன், அவனும் சொன்னான் 'லொள்'.


பிரவீன், அம்மா, தீபு அடிக்கடி அனுப்பிய, ஆல்ஃபாவின் தூங்குகிற, சாப்பிடுகிற, விளையாடுகிற படங்கள் தான், என் ‌ரசனைக்கு எரிபொருளாயிருந்தன. ஆல்ஃபா வந்திருந்த புதிதில் ராம் என்கிற மற்றொரு உருப்படியும் வந்திருந்தது. நம்ம ஆல்ஃபா எல்லோருடனும் விளையாடி விளையாடி தோஸ்த் ஆகிவிடுவான்; கடித்து வைப்பான்; மற்றொன்று உருமிய கணமே, அருகில் படுத்து தாஜா செய்வதில் ராஜாதிராஜன் தான் ஆல்ஃபா. நாய் பக்கமே போகாத பெரிம்மா கூட ஆல்ஃபாக்குத்தான் முதல் சாப்பாடு வைப்பார். ஆறறிவுக்கும் அய்ந்தறிவுக்கும் என எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகவே இருந்தான் ஆல்ஃபா. ஒருமுறை ஆல்ஃபா ராமிடம் போய் விளையாட, அது கண்ணை பூரிவிட்டது; அப்போது எனக்கு ராம் மீது கோவம். ஆனால், மற்றவர்களோ “ஆல்ஃபா சும்மா படுத்து இருக்கிறவனை கடிச்சா, அவன் சும்மா இருப்பானா” என்று ராம்க்கு வக்காளத்து வாங்கினார்கள்.


ஆல்ஃபா மட்டும் கட்டிப்போட படாமலேயே வெகுநாட்கள் இருந்தான். ஒரு நாள் தீபு வீட்டிற்குள் நுழைகையில், அவனும் வந்து ஹால் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான், பாட்டி வந்து துரத்தும் வரை. கோழிகளை துரத்திப் பிடிக்க ஆரம்பிக்கும் நிலையில் தான், அவனை கட்டிப் போட்டார்கள். நான்தான் அதை கழட்டி விடுங்கள் என்று கெஞ்சுவேன். சில சமயம் யார் பேச்சையும் கேட்காமல், கழட்டிவிட்டு திட்டும் வாங்குவேன். அவன் படுக்கும் இடத்தில், ஒரு பெரிய பள்ளத்தையே உருவாக்கி வைப்பான். சில சமயம் அவனைத்தேட கூடும்; கட்டியிருந்த இடத்தில் காணவில்லையே என்று, ‘ஆல்ஃபா’ என்று அழைத்ததும், ‘எப்படியும் எதையும் இவர்கள் தரப்போவதில்லை’ என்ற லுக்குடன் தலையை தூக்கி பார்ப்பான். முதல் கொஞ்ச நாள் கழட்டிவிட்டால், நேராக வாசல் வந்து கொண்டிருந்தவன், நாட்கள் கழிய கழிய, குப்பை மேட்டுக்கு ஓடி சேற்றில்சேர ஆரம்பித்தான்; வரும்போது கரு கரு என்று வருவான். இவனை குளித்துவிட்ட வீடியோக்கள் கூட என்னிடம் உள்ளது, காரணம், அய்யாவுக்கு குளிக்கப் பிடிக்காது. எவ்வளவு வெயிலானாலும் தண்ணி பட்டால் போதும், எதோ யாரோ கொலை பண்ண வந்தமாறி கத்துவான்.


இவனை கழட்டி விட்டால் பிடிக்க ஒரு வழி உள்ளது; பிளாஸ்டிக் காகிதத்தை கசக்கினால், அந்த சத்தத்திற்கு ஓடி வருவான்; ஏதோ தரப் போகிறார்கள் என்று வந்து பாவமாக நிற்பான். இவனுக்கு, இவனை தூக்கி வைத்தால் பிடிக்காது. பக்கத்தில் நின்றால் நின்று கொள்வான்; அப்போது தொடலாம் ஆனால் தூக்கி வைத்தால், துள்ளி குதித்து இறங்கி விடுவான். சத்யா இவனை அழகாக படம் பிடித்துக் காட்ட, அதைப் பார்த்து, ‘இதேபோல ஆல்ஃபா பக்கத்தில் நானும் நிற்பதுபோல் வேண்டும்’ என்று கூறுவேன்; ‘சரி வா’ என்று எப்போதாவது சத்யா சொல்ல, அந்த சமயத்தில், ஒன்று நான் குளித்து இருக்கமாட்டேன் அல்லது அவன் குளித்து இருக்கமாட்டான். இப்படியே தட்டிப்போய் கடைசிவரை ஒரு புகைப்படம் கூட எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.


இந்த ஆசையை தீர்ப்பது போல், ஜூனில் பொன்வண்ணன் அண்ணா வந்தபோது, ராக்கெட் விட நாய்கள் கட்டி இருக்கும் இடத்திற்கு சென்றோம். வழக்கம்போல் நான் ஆல்ஃபாவை தொட்டு கொஞ்சிக் கொண்டிருக்கையில், அந்த அண்ணா ‘அப்படியே இரு’ என்று ஒரு போட்டோ எடுத்தார். எனக்கு ரொம்ப நாள் ஆசை நிறைவேற போகுது என்று சந்தோஷம். அந்த அண்ணா ‘உட்கார்ந்து போஸ் கொடு நல்லா இருக்கும்’ என்று கூற, நான் உட்கார்ந்ததும், ஆல்ஃபா என் மீது ஏறி, கீழே தள்ளி விட்டான். ஆனாலும், விடாப்பிடியாக ‘நான் அவனை பிடித்துக் கொள்கிறேன்’ என்று கெட்டியாக பிடித்து இரண்டாவது முறை போட்டோ எடுக்க சொல்ல, அவன் என்னை மறுபடியும் கீழே தள்ளி, இம்முறை என்மேலே அவன் காலை வைத்து ஏறினான்; நான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டிற்குள் ஓடி வந்தேன். அப்பொழுது கிடைத்த புகைப்படங்களே எனக்கு ஆல்ஃபாவுடன் இருக்கும் ஞாபகம்.


லாக்டவுன் போது, ‘சரி எல்லா நாய்களையும் ஒரு ஒரு நாள் கழட்டிவிட்டு விடுவோம்’ என்று நினைத்தோம். கழட்டிவிடும்முன்னே நம்ம ஆல்ஃபா, அவன் சங்கிலியை இழுத்து கழட்டி, இன்னொரு நாயுடன் ஊருக்குள் ஓடி விடுவான். ராமின் வழிகாட்டி ஆகிவிட்டான் ஆல்ஃபா. ஒரு நாள் ஆல்பா ஊருக்குள் போக, நான் பிடித்து வரலாம் என்று போகும்போது, ஆலங்காட்டிற்குள் சென்று விட்டான் ஆல்ஃபா. ராமை பிடிக்கலாம் என்றால், ஆல்பா என்னை தொடவே விட மாட்டேங்கிறான். அவன் சேற்று காலுடன் என்மீது தாவி விளையாடி கொண்டே இருந்தான்; கடைசியில் ஆல்ஃபாவும் நானும் முழுவதும் சேறாக வீடு திரும்பினோம். ஆல்ஃபா இந்த மாதிரி இழுத்து இழுத்து கழட்டி கொள்வதால், அவன் கழுத்து முழுவதும் காயங்கள் ஆகிப்போனது. அதனால் ஒருமுறை, நான் கழட்டிவிட்டேன். கொஞ்ச நேரம் எங்களுடன் விளையாடிவிட்டு, வழக்கம்போல் ஊருக்குள் செல்லாமல் நேராக ஆடுகள் இருக்கும் இடத்துக்கு நுழைந்தது; வேகமாக துரத்தி வட்டம் அடிக்க வைத்துக்கொண்டிருந்தது. வெளியே இருந்து பார்த்தால் ஆடுகள் ஓடுவதுபோல் மட்டுமே தெரியும்; ஏனென்றால் இவனும் ஆட்டு நிறத்திலேயே ஆட்டுக்குள் ஆடாக துரத்திக் கொண்டிருந்தான். எனக்கோ பயம்; யாரா பார்த்தா ‘யார் கழட்டி விட்டது’ என்று திட்டுவார்கள். உடனே சத்யா மற்றும் பிரதீப் அண்ணா சேர்ந்து ஆல்ஃபாவை பிடித்துவிட்டனர்.


அப்பா, பெரிதாக பாட்டி வீட்டு நாய்கள் பத்தி கேட்டுக் கொள்ள மாட்டார்; அதிலும் விதிவிலக்கு ஆல்ஃபா. பாட்டி வீட்டிற்கு வந்தாலே, என்னை கேட்பார் ‘அட என்ன ஆல்பாவ ஆளையே காணோம்’. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது, ஒரு முறை ஹேமந்த் என்னை அலைபேசியில் அழைத்து, ‘உங்கள் வீட்டு ஆல்ஃபா போல் ஒரு நாய் வாங்க வேண்டும்’ என்று கூறினான். பிரியா எப்போதும் ஆல்ஃபா போட்டோவை கேட்பாள்; அல்லது ஆல்ஃபா எப்படி இருக்கான் என்று விசாரிப்பாள். இருக்கும் நாலு நாய்களில், நான் அல்லது யார் அருகே சென்றாலும், அவர்கள் மீது கால்வைத்து ஏறி கொஞ்ச சொல்லக்கூடிய ஒன்று ஆல்ஃபா மட்டுமே!


ஒரு சமயம் வீட்டில் அதிகமாக நான்வெஜ் செய்து வர, நாய்களுக்கும் வேட்டை ஆக இருந்தது. அடுத்து மோர் சாதம் கொடுத்தால் ஆல்ஃபா சாப்பிடவில்லை; இரண்டு நாட்களுக்கு அப்புறம் பார்த்தால், அவன் டிமாண்ட் செய்திருக்கிறான் நான்வெஜ் வேண்டும் என்று. பின் முட்டை கலந்த சாப்பாடு போட உண்ணாவிரதத்தை முடித்தான்.


மழை காலத்தில் ஆல்ஃபா, பிரவுனி இடமாற்றப்பட்டார்கள். வீட்டிற்குள் இருந்து பார்த்து வந்தவர்களை, வெளியே வந்தால் தான் பார்க்க முடியும் என்று ஆகிப்போனது. அந்த வாரத்தில் அம்மா எங்களுக்கு பிஸ்கெட் பாக்கெட், நாய்களுக்கு டைகர் பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு, நாளை கொடு என்றார். சரி என்று ஜூன் 22 எல்லோருக்கும் பிரித்து போட்டு வந்தேன்; அப்போ ஆல்ஃபா என் மீது தாவவில்லை. நான் பலமுறை கூப்பிட்ட பின்னரே என் அருகில் வந்தான் பிஸ்கெட் கொடுத்தபோதும் சாப்பிடவில்லை. எனக்கு தூக்கி வாரி போட்டது, அருகில் ஏதாவது உள்ளதா என்று பார்த்தேன். வாந்தி எடுத்து இருந்தான். உடனே, பாட்டியிடம் ஓடி வந்து சொன்னேன் அந்த நாள் இரவே அவனை கழட்டி விட்டார்கள்.


நான் நைட்ஷிப்டில் வேலை செய்வதால், பொதுவாக 12 மணி அளவில் தான் எழுந்து கொண்டிருந்தேன். ஆனால் 23 ஜூன், ஆல்ஃபா என்று மற்றவர்கள் கூப்பிடும் சத்தத்தில் எழுந்தேன். வெளியே ஓடிப் பார்த்தால், அவனை காணவில்லை. பாட்டி, ‘இல்லை, காத்தால ஒரு முறை இப்படி பண்ணினான் இப்பவும் பண்ணுறான், வந்துறுவான்’ என்றார். அதேபோல் வந்துசேர்ந்தான் ஆல்ஃபா. அவனை பிடித்து டெம்பரேச்சர் பார்த்தான் பிரவீன், 103 டிகிரி. உடனே, டாக்டரிடம் கேட்டு குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து கொடுத்தார்கள். அதை குடித்த உடன், எப்போதும் போல் நிறைய தண்ணீர் குடித்தான்; பால் ஊற்றி வைத்து சிறிதும் குடிக்கவில்லை.


நான் அவனை கட்டிப்போட்டு விட்டேன், மாமரத்தில்; கண் பார்வையிலேயே இருக்கட்டும் என்று; அங்கேயே அவன் கொஞ்சம் மண்ணைப் பறித்து படுத்துக்கொண்டான். மாலையில், ரொம்ப நேரமாக இங்கேயே இருக்கிறான் என்று கழட்டிவிட்டேன். ஒரு கால்மணி நேரம் அதே இடத்தில் படுத்திருந்தவன், எந்திரித்து கிரானைட் நோக்கி செல்ல ஆரம்பித்தான். சரி, கட்டி விடலாம் என்று நான் போகையில், அவன் கிரானைட் நோக்கி செல்லத் துடித்தான். நான் அவனை விடாமல் பிடித்து நிற்கவைக்கையில், சோர்ந்து அதே இடத்தில் படுத்துக் கொண்டான். அவனிடம் பேசி போராடி, கடைசியில் அவனை தூக்கி வந்து மாமரத்தில் கட்டி போட்டேன்; அதுவே அவனை கடைசியாக உயிருடன் தொட்டுப் பார்த்தது.


டாக்டர் ஊசி போட்டு ‘நாளை பார்ப்போம், இப்போது சீரியசாக உள்ளது’ என்று சென்றார். நான் இரவு முழுவதும் வேண்டிக் கொண்டே இருந்தேன் அடுத்த நாள் அவனை உயிருடன் பார்க்க வேண்டுமென்று. தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் விடிந்ததும், பாட்டியிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இடைவெளி விட்டுவிட்டு; “என் ஆல்ஃபா எப்படி இருக்கிறான்” என்று; ‘நீ தூங்கு’ என்று சொல்லி தூங்க வைத்துவிட்டார்.


ஜூன் 24, ஒரு 10.45 மணி அளவில், பாட்டி என்னிடம் ‘ஆல்ஃபா நம்மள விட்டு போயாச்சு’ என்றார். உடனே, ஓடி, தேடி அவனை படுக்க வைத்த இடத்திற்கு சென்றேன். அவன் எப்போதும் தூங்குவது போல் படுத்து இருந்தான். ஆனால், ஈக்கள் அவனை மொய்த்துக் கொண்டிருந்தன. அவனை நான் தொட்டுப் பார்த்தேன்; தோல் மென்மையாகவும் உடம்பு விரைத்தும் இருந்தன. என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை; இனிமேல் ஆல்ஃபாவை பார்க்க முடியாது என்று. இதுவரை பல நாய்கள் இங்கு இருந்திருக்கிறது, பொடிமாஸ், ரமேஷ், மகி, மோட்டு, சோட்டு; ஆனால் எல்லாம் நான் வீட்டில் இல்லாத போது, செய்தி மட்டுமே காதுக்கு வரும். ஆனால், இது நான் நேரில் பார்த்து…. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனுக்காக வேண்டிக் கொண்ட பொழுது, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதாக வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் நடக்காவிட்டாலும், ஆல்ஃபாவின் நினைவாக அந்த இல்லத்திற்கு சில நூறு ரூபாய் அளித்தேன்.


இப்படி இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு போவான் என்று தெரிந்திருந்தால், கட்டியே போட்டிருக்க மாட்டேனே. அவனுக்கு இஷ்டம் போல் திரிய விட்டு இருப்பேனே. இனி என்ன செய்வேன் அவனுக்கு. அவனுக்கு பிடித்தாற்போல் கடைசி நாட்கள் கூட அமையவில்லை; இனியும் என்னால் அமைச்சு தர முடியாது. என்னை மன்னித்துவிடு ஆல்ஃபா! இனி நீ இருக்கும் இடத்தில், எப்போதும் உனக்கு சுதந்திரம் தான். உன் கழுத்தில் இனி ஒரு போதும் சங்கிலிகள் ஏற போவதே இல்லை. உனக்கு பிடித்தாற்போல் சுற்றித் திரி; கோழிகளை துரத்தி பயமுறுத்தி விளையாடு; உன்னை மிரட்ட ஆட்கள் யாரும் இருக்கப்போவதில்லை; எப்போதும் சந்தோஷமாக இரு; எங்களை மறந்து விடாதே, நீ என்னுடைய நினைவில் இருப்பாய்; நீ செய்த சேஷ்டைகள் மறக்காமல் இருப்பதற்காகவே இதை எழுதுகிறேன்.


'பை ஆல்ஃபாமயிலு'


'லொள்'




என்றும் என் ஆல்ஃபாகுட்டி நினைவில்,

பிரியத்துடன் உன் அக்கா, பவி.








[தோழி பவி, அவள் நாயைப்பற்றி வெவ்வேறு தினங்களில் எழுதியதை எல்லாம் தொகுத்து இங்கு பதிவிட்டிருக்கிறோம்]

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

©2020 by Jerome. Proudly created with Wix.com

bottom of page