top of page

நான் தொலைந்த கதை

அப்பா அன்று நல்ல மனநிலையில் இருந்தார் போல, எங்கள் எல்லாரையும் வெளியே போய் விளையாட அனுமதித்தார். எல்லாமே அப்பாவின் எண்ணத்தைப்பொறுத்து தான்; சிலசமயம் “எங்கடா போய் சுத்திட்டு வரீங்க; நேரத்துக்கு வர தெரியாது” என திட்டும் அப்பாவே, “அட ஆகவலிகளா, வயசுபுள்ளைங்க நல்ல ஓடியாடி வெளாட வேண்டித்தானே, அதுக்குள்ள வராட்டி என்னப்போச்சு” என்றும் கேட்பார்; எல்லாமே அப்பாவின் எண்ணத்தைப்பொறுத்து தான்.


எங்கள் ஊரில், விளையாட சென்றவர்கள் மர்மமான முறையில் இறந்துபோவதும் தொலைந்துப்போவதுமாக இருந்தது. ஆனாலும் எங்களுக்கு அது கட்டுக்கதை என்று தோன்றியது. அதனால் தான், அப்பா விளையாட விட்ட அன்று, எனக்கும் என் கூட்டுக்காரர்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி. மிக ஆரவாரமாக ஆட்டமும் பாட்டமுமாக துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தோம். அது மழைக்காலம்; எங்கள் ஊர் ஆற்றில் திமுதிமுவென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாருக்கும் அப்போது தான் அந்த விபரீத எண்ணம் தோன்றியது. நீச்சல். ஆற்றுநீரும் எங்கள் ஆர்வமும் கரைபுரண்டு ஓடத்துவங்கியது.


நானும் சகாக்களும் மகிழ்வோடு நீந்தத்துவங்கினோம். நீரும் அதிக குளுமை இல்லாமல், வெதுவெதுப்பாக இருந்ததால் சிலாகித்து குளித்தும் நீந்தியும் நேரம் போக்கினோம். அங்கேவந்த அப்பா, நேரம் ஆகியது கரையேற சொன்னார். அன்று எங்களுக்கு அப்பாவை வம்பிழுக்க வேண்டும்போலிருந்தது. கொக்கரிப்போடு, வேகமாக நீந்த தொடங்கினோம். தண்ணீர் வேகமும் எங்களுக்கு உதவியது. இங்கும் அங்கும் மோதி சிரித்துக்கொண்டே நீந்தி போனோம். திரும்பிபார்க்க நான்தான் முன்னேறி போய்க்கொண்டிருந்தேன். நான் முன்னே இருக்கிறேன் என்பது, நானே எதிர்பார்க்காத உந்துதலை கொடுத்தது. நீச்சல் வேகம்பிடித்தது. எதிரில் வந்த பெரும்பாறையை கவனிக்கவும், அதில் மோதி நான் மூர்ச்சையாகவும் சரியாக இருந்தது.


மெல்ல நினைவு வருகையில் நல்ல சொகுசான படுக்கையில் என்னை கிடத்தியிருப்பதை பார்த்தேன். நான் மட்டும் தனியே இருந்தேன் அந்த அறையில். என் சகாக்கள் யாரையும் காணோம். அப்பாவின் குரல் கேட்கவே இல்லை. இது எங்கள் ஊரில்லை. ஓ, நான் வேறெங்கோ தொலைந்து வந்திருக்கிறேன் போல. எனக்கு தேம்பி அழவேண்டும் போலிருந்தது. வெறுமை, புது இடவாசம் எல்லாம் சேர்ந்து, என்னை அப்படியே அழுதபடி தூங்கிப்போக செய்தது.


நாள்போக போக, நான் அந்த தனியறைக்கு, அந்த ஊர் வாசத்திற்கு பழகிப்போனேன். நல்ல ஊர்தான், நல்ல அறைதான்; ஆனால் எப்போதும் அங்கு மழை போல; செம்புல பெயல்நீர் என் அறையை நனைத்துக்கொண்டே இருக்கும். கடலில் புதிதாய் போவோருக்கு கடற்காய்ச்சல் வருமாமே, ஒவ்வாதைகளோடு; அப்படித்தான் எனக்கும் நடக்கிறது போல. என்னில் அங்கங்கு வீக்கங்கள் வர தொடங்கின; திடீர்திடீரென உடலில் துளைகள் விழ ஆரம்பித்தன. வலி தாங்கவே முடியவில்லை.

இன்னொன்றை, சொல்லமறந்தேன் பாருங்களேன். இடையில் எப்போதோ என்கதையை இந்தூர்க்காரர்களிடம் உளறி இருப்பேனோ என்னமோ தெரியவில்லை; இங்கும் நான் ஓடி தொலையாமலிருக்க ஒரு கனத்த சங்கிலியை என்னில் துளைத்து மாட்டியிருந்தார்கள். வலி இன்னும் பீறிட்டது. கத்தினேன்; அறைக்கதவை எட்டியெட்டி மிதித்தேன்; இப்போதே வெளியே விடுங்கள் என்ற விடுதலை அறைகூவல் விடுத்தேன். அவர்களோ, அந்த அறையில் காதையும் கைகளையும் வைத்து, “இவன் ஓடிவிடவில்லை, உள்ளேதான் இருக்கிறான்” என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்கள். என்னால் தாங்கவே முடியவில்லை. அப்படியே குறுகி படுத்து தூங்கிப்போனேன்.


ஊர் திருவிழா வந்தது. எல்லாரும் மகிழ்ச்சியில் குதித்தார்கள். நான் இந்தூருக்கு வந்த நேரம் தான் எல்லாம் நன்றாக நடக்கிறது என்று அவர்களுக்கு நம்பிக்கை போலும்; என்னை மகிழ்விக்க பெரும்பாடு பட்டார்கள். ஆனால், அப்போதும் என் சங்கிலியை அவர்கள் அவிழ்த்துவிட விரும்பவில்லை. என் அறைக்காவலாளிக்கு கூட அவர்கள் மரியாதையை கொடுத்தார்கள், என்னை ஓடவிடாமல் பத்திரமாய் காத்திருப்பதற்கு. எனக்கு ஆத்திரம் தாங்கமுடியவில்லை. இனி முடியாதென்று, ஊரை இம்சிக்க முடிவு செய்தேன். இரவு வேளைகளில் கதவை தடமுடா எனதட்டுவதும் ஓடுவதுமாக கூச்சல்போடுவேன். என்னை சமாளிக்க பெரும்பாடு பட்டு சோர்ந்து போனார்கள். முடிந்த மட்டும் முட்டிமோதி கதவுடைக்க பார்க்க, அவர்களும்சரி போய் தொலை என சங்கிலியோடயே என்னை தள்ளினார்கள்.


கதவு உடைபட்டது. வெளிச்சம் என்னை கதிர்கைகளால் அன்பாய் வெளியிழுத்து பார்த்தது. தனிமை வெறுமை இருள் போராட்டம் எல்லாம் தாண்டி, ஒருவழியாக அம்மாவின் யோனிவழி வெளியே விழுந்தேன். மேலெல்லாம் செம்புலநீரின் பிசுபிசுப்பு. சுடுநீர் ஊற்றி கழுவி, ஒருவழியாய் என் சங்கிலியை அறுத்து முடிச்சுபோட்டார்கள். கதகதப்பான துணி போர்த்தி, எனக்கான உலகின் முதல் முத்தமிட்டு, படுக்கப்போட்டார்கள் என்னை. சிறுகோட்டுத்துண்டை ஒன்றன் மேல் ஒன்று வைத்தார் போன்றிருந்த புது சங்கிலியை, என் கழுத்தில் போட்டு, ஜோசப் என்றார்கள் என்னை.


அம்மா தூங்கியிருந்தாள்; என் வலப்புறமும் இடப்புறமும் என்னை போல இருவர் கிடந்தனர். அவர்களும், என்னைப்போன்று, விளையாட்டில் தொலைந்து, அழுது தனிமையில் குறுகி, இப்போதுதான் கதவுடைத்து வந்தார்களாம். என் கழுத்து சங்கிலியை காட்டி அவர்களுடையதை எங்கே என்றேன். வலப்புறமிருந்தவன் சொன்னான், அவர்களுக்கும் வரவிருக்கிறதாம், அது குறித்த தான் ஆலோசனை போய் கொண்டிருக்கிறதாம். அவர்கள் வந்த யோனியை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்களாம்; அந்த உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை முடிந்ததும் அவர்களுக்கான தங்கசங்கிலி வந்துவிடுமாம்; யோனிக்கேற்றவாறு தான் விதவித சங்கிலிகள் முடிவு செய்யப்படுமாம்.


“ஓ” என்று நான் சொல்லிமுடிக்கும் முன், அவரவர் அம்மாக்கள் எங்களை மாரில் போட்டுக்கொள்ள, அவரவருக்கான முலைகளில் அவரவருக்கான பாலை குடித்து, அவரவர் போக்கில் வளர்ந்து, அவரவர் சங்கிலி பற்றிய முற்றிய பேச்சில், அவன் வீசிய அம்பில், மரத்தில் சாய்ந்து நான் செத்துப்போனேன்; நான் இறந்த மரத்திலேயே அறையப்பட்டு அவனும் செத்துப்போனான்.




 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

©2020 by Jerome. Proudly created with Wix.com

bottom of page