முடி உதிர் ஏக்கங்கள்!
- Unmaththan

- Mar 7, 2021
- 1 min read
நான் நாய்ஸ்நேகனல்ல; ஆனால் நாய் விரும்பிகள் எனக்கு நெருக்கம். எங்கெங்கோ கைவிடப்பட்ட நாய்களையெல்லாம் தூக்கி வந்து பாசமாய் வளர்க்கும் பவிஷ்னா வீட்டை, நாயோடு நாயாகி திரியும் அபிலாஷை , மருமகளுக்காக நாய்வாங்கி பாத்துக்கொள்ளும் பிரியாவின் வீட்டை, பட்டப்படிப்பு படித்திருந்தாலும் என்றாவது 'நாய் ஸ்பா' வைக்க வேண்டும் என ஆசையாய் பேசும் ஆதிரையை, காதலிக்காக நாய் கஃபே போகவிரும்பும் மோகனை, ஓவியாவை, என் அப்பாவை தங்கச்சியை அத்தையை அண்ணனை என பலவேறு பட்ட நாய் விரும்பிகளை கண்டிருக்கிறேன், கண்டு கொண்டிருக்கிறேன்.
ஒரு அத்தை வீட்டில் எக்கச்சக்க நாய்கள் இருக்கும்; எப்போது யார் வண்டியில் போனாலும் ஓடிப்போய் பக்கத்தில் நின்று, பால்ய என்னை போலவே, ஒரு ரவுண்டு கேட்கும் நாய்களை அங்குமட்டும் நான் பாத்திருக்கிறேன். அங்கிருந்து தான் அப்பா வொய்ட்டியை (ஆம் அதான் எங்கள் நாயின் பெயர்) முதன்முதலில் கொண்டு வந்தார். எங்கள் வீட்டை பொறுத்தவரை வொய்ட்டி தான் கடைக்குட்டி. சின்ன வயதில் எத்துனை ஆசையோடு அப்பா வீட்டுக்கு வரும்போது நானும் தங்கச்சியும் ஓடுவோமோ, அப்பபடித்தான் வொய்ட்டி இன்னும் ஓடிப்போய் அப்பாவை தொத்திக்கொள்ளவதால், அப்பாவுக்கு அலாதி பிரியம் அதன் மேல். நாயே பெரிதாய் பிடிக்காத எனக்கும் கூட வொய்ட்டி மேல் ஒரு பிரியம் உண்டு. ஆனால் இந்த நாய் எங்கள் வொயிட்டி அல்ல.

எங்கள் தெருவில் ஓங்கி காலை தரையில் அடித்தால் ஓடிப்போகும் நாய், பல குட்டி போட்டு எல்லாம் இறந்து போக பைத்தியம் பிடித்தாற்போல் புண்களோடு சுற்றும் வாழ்ந்து கெட்ட நாய், மிக கொழுத்து எல்லாரையும் பயமுறுத்தும் ராட்சஸநாய், எப்போதெல்லாம் கடைக்கு போகிறேனோ அப்போதெல்லாம் என்முன் நின்று முறைத்து, யார் முதலில் குறைக்கிறார்கள் என்ற போட்டியில் எப்போதும் என்னிடம் தோற்று ஓடிப்போகும் நாய் என பல நாய்களில் இது புது வரவு. வீட்டுக்கு தெரியாமல் தங்கச்சி சாப்பாடு அவ்வப்போது போடுவதால் இப்போதெல்லாம் எங்கள் வாசல் தான் அய்யாவுக்கு அரியாசனம். தம்பி தங்கை பிறந்த பின் ஏங்கி போகும் மூத்த பிள்ளையாய் வொயிட்டி ,தங்கச்சி இந்த நாயை வாசலில் கொஞ்சுகிற போதெல்லாம் ஏங்கி முடி உதிர்க்கிறது.
மனிதன், எலும்புக்கு நாய் வால் ஆட்டுவதாகவும், நன்றியோடு இருப்பதாகவும் சொல்கிறான். அப்படி என்றால் நீங்கள் போடும் பாலை பொறுக்கி தரவும் வீட்டை பாத்துகொள்ளவும் கேட்டுக்கும்போதெல்லாம் கேட்பவருக்க்கெல்லாம் ஷெகான்ட் கொடுக்கவும் வாலை ஆட்டவும் மட்டும்தானா நாய்? உண்மைலுமே, நீங்கள் போட்ட எலும்பைத் தாண்டி நீங்கள் தடவிகொடுத்ததைத்தான் உங்கள் நாய்கள் மறக்காமல் இருப்பதாக தோன்றுகிறது எனக்கு.




Comments