மார்கழியில் மக்களிசை - 2021
- Unmaththan

- Dec 27, 2021
- 2 min read

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என அவர்கள் சொல்லிய நேரத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் தனியாக போய்விடுவேன்; முன்கூட்டியே போய் காத்திருப்பேன். நிகழ்ச்சிக்கு முந்தைய சில மணி நேரங்கள் ஒரு அதிகாலை போல, ஒரு நள்ளிரவை போல, ஒரு பனி இரவின் தேநீரை போல கதகதப்பானது; அது ஒரு அலாதி இன்பம்; அனுபவம். சேர்களை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பார்கள்; கைகளில் சில விவரங்கள் கொண்ட தாள்களுடன் யாரையோ தேடி நடந்து கொண்டிருப்பார்கள்; ஸ்பீக்கர் பக்கத்தில் நண்டு கொடுக்கை போல, இரண்டு கம்பிகள் நீட்டி நிற்கும் பாதி கடித்த ஒயரை, வாயில் ஸ்பேனருடன் பேண்ட்டை மேலேற்றி விட்டு ஒரு அண்ணா நின்று கொண்டிருப்பார்; ஹாரிபாட்டர் படத்தில் ஒரு செடி கீச்சென்று கத்துமே, அப்படி ஸப்தங்களை உண்டாக்கி மைக் டெஸ்ட்டிங் நடந்து கொண்டிருக்க்கும்; இன்னும் சிலநேரங்களில் மேடையை ஆட்டிவைக்க போகிறவர்கள், பாதி முடிந்த ஒப்பனைகளுடன் தயாராகிக் கொண்டிருப்பார்கள். பள்ளிக்காலத்தில், நடனத்திற்கு தயாராகி பவுடர் பூசி, சலங்கை மாட்டி, புடவை கட்டி, தலையை மட்டும் கடைசியாய் வாரி கொள்ளலாம் என வெளியே நடமாடிய பெண்களை ஏனோ இன்னும் பிடித்திருக்கிறது. இது ஒரு அற்புதம் நிகழ்வதற்கு, மழை பொழிவதற்கு முந்தைய கணம் போன்றதுதான்; அதனால் வழக்கத்தை போலவே சொல்லிய நேரத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருக்கும் போதே வந்து நின்று கொண்டிருக்கிறேன்.
வெளியே ‘ஆர்டிஸ்ட்’ என கழுத்தில் மாட்டிக்கொண்டு நின்றவர்களிடம் பேச ஆரம்பிக்கிறேன். ‘அய்யா நீங்க என்ன பண்ண போறீங்க இன்னைக்கு’ ‘ஆதிவாசி நாங்க’ ‘ஓ, உங்க வாத்தியம் பேரு என்ன’ ‘எங்க ஊரு கலை இது’ ‘அதுக்கு பேரு இல்லைங்களா’ ‘எங்க கலாச்சார பாட்டு’ இப்படித்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் பில்லூரிலிருந்து வந்த பழங்குடி கலைக்குழு என பின்னால் தெரிந்தது. அவர்கள் மேடை ஏறி நிகழ்த்த ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் குழு சார்பாக ஒருவர், அடுத்து இந்த பாடலை பாடப் போகிறோம் என்கிறார்கள். மேடையிலேயே இன்னொருவர் சப்தமிடுகிறார்; ‘ஏய் அது வேணாம்; நாம இந்த பாட்டு பாடுவோம்’. மகிழ்ந்தபடி ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். ‘எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த, கொடுத்த, கொடுத்த, நீ.. நீல.. நீலமுக்கு நன்றி’ என்றபடியே பரிசுத்தமான ஒப்பனையற்ற நன்றியை சொல்லி இறங்குகிறார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ‘பறைனா ஒன்னு மட்டுமா, பல வகையிருக்கு. அங்க இருக்கிறது பேரு தூம்பு’ என ஒவ்வொரு வாத்தியங்களையும் குழுவையும் பற்றி பகிர்ந்து கொள்கிறார். இப்போது நான் கேட்கிறேன்; ‘இத்தனை பேரு இருக்காங்களே, ரிஹர்சல் எங்க பண்ணுனீங்க’. சிரிக்கிறார். பெரிய சிரிப்பு அது. ‘எங்களுக்கு என்னத்துக்கு ரிஹர்சல் வேண்டிக்கிடக்கு’. மீண்டும் சிரிக்கிறார். நானும் சிரிக்கிறேன். விழா நடக்கிறது. ரஞ்சித் சிரிக்கிறார். பறை அடிப்பவர் சிரிக்கிறார். பக்கத்திலிருப்பவர் சிரிக்கிறார். இடம் இல்லாமல் கீழே அமர்ந்த எல்லாரும் சிரிக்கிறோம்.ஆம், கலை மக்களுக்கானது.
19-12-2021
உன்மத்தன்




Comments