என்ன தலைப்பை வைக்கச்சொல்கிறாய், காருண்யா?
- Unmaththan

- Jul 10, 2021
- 2 min read
காருண்யா, உன்னை எனக்கு தெரியவே தெரியாது. நீ பெரிய அலுவலகத்தில் வேலைக்கு காத்திருந்தாய் என்கிறார்கள், எனக்கு தெரியாது காருண்யா. நீ மிக அருமையாக பாடுவாய் என்று சொன்னார்கள், எனக்கு தெரியாது காருண்யா. உன்னை எனக்கு தெரியவே தெரியாது, காருண்யா. ஒரு நாள் காலை, நீ இறந்து விட்டதாக சொல்கிறார்கள்; திடீரென எனக்கு அத்தனை நெருக்கமானவளைப் போல ஒரு பிம்பத்தை சிருஷ்டித்து விட்டாய், காருண்யா. என் தினத்தின் மீது, தீரா துயரத்தின் மழையைப் பெய்யச்செய்து விட்டாய், காருண்யா. 'இது எப்படி சாத்தியம், அவள் எப்படி அவ்வளவு எளிதில் இறந்து போக முடியும்', இந்த கேள்விகள், மீண்டும் மீண்டும் காதருகில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. துன்பத்தின் இசையை பின்னனியில் ஒலிக்கவிட்டுக்கொண்டு, ஈரக்கண்களுடன், இதை எழுதிக்கொண்டிருக்கிறேன், காருண்யா.
கடந்த ஒருவருடமாகவே, எதிர்பாரமல் இறந்து போனவர்கள் என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறார்கள்; அதில் இப்போது நீயும் ஒருத்தியாக சேர்ந்து கொண்டாய், காருண்யா. சுத்தமாக தெரியாத ஒருவரின் மரணம் என்னை ஏன் துன்புருத்துகிறது? ஒருவேளை, என்னைவிட மூன்று வயது குறைந்தவள் நீ என்பது காரணமா? இருக்கலாம். ஆனால் காருண்யா, உன்னை எனக்கு தெரியவே தெரியாது. நண்பனிடம் கேட்டிருக்கிறேன், நீ பாடிய காணொளிகளை தேடி அனுப்பச்சொல்லி. உன் குரலையே இனிமேல் தான் முதல்முறை கேட்கப்போகிறேன், காருண்யா.
என் இன்ஸ்டாகிராமில் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை, நீ அனுப்பியிருந்த ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் கிடப்பில் இருந்தது காருண்யா. குறைந்த நண்பர்களை வைத்துக்கொள்கிற கொள்கையில் அதை ஏற்கவில்லை நான். அது இப்போது இப்படி என்னை துன்புறுத்தும் எண்ணமாக வந்து நிற்கும் என நினைக்கவில்லை காருண்யா. உனக்கு நான் இனி ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பினாலும், நீ அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை காருண்யா, ஒரு தண்டனையைப் போல காட்சியளிக்கிறது அது.
உன்னை எனக்கு தெரியவே தெரியாது, காருண்யா. திடீரென எனக்கு அத்தனை நெருக்கமானவளைப் போல ஒரு பிம்பத்தை சிருஷ்டித்து விட்டாய், காருண்யா. என் தினத்தின் மீது, தீரா துயரத்தின் மழையைப் பெய்யச்செய்து விட்டாய், காருண்யா. காருண்யா காருண்யா காருண்யா கா.......ருண்யா மீண்டும் மீண்டும் உன் பெயரைத் திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். துயரம் தாளாமல் எழுதுகிறேன் காருண்யா, வேறென்ன தெரியும் எனக்கு, வேறென்ன செய்துவிட முடியும் நான், சொல் காருண்யா. என் தினத்தின் மீது, தீரா துயரத்தின் மழையைப் பெய்யச்செய்து விட்டாய், காருண்யா. அம்மழையில் நனைந்த சிறுபறவையைப்போல, சிறகுகள் உதறி, துயரத்தின் இசையை மீட்டுகிறாய் கா.....ரு....ண்.....யா.
மரணங்கள் முன்பைவிட இப்போது சிக்கலாகிவிட்டன. இறந்தவனின் உடையை படுக்கையை வீட்டிலிருந்து துடைத்தெறிவது போல, சமூக வலைதளங்களில் இருந்தும் பிரித்தெறிய வேண்டியிருக்கிறது. யாரையோ Tag செய்ய செல்கையில், முதல் எழுத்து இறந்தவனின் பெயரோடு ஒத்துப்போனால், அந்த பெயரை காட்டித்தொலைக்கும். 'Least interact with'ல் இறந்தவனின் பெயர், அதும் நெருங்கியவனாக இருந்துவிட்டால், இம்சித்து எடுத்துவிடும். 'நாம செத்தப்பின்னாடியும் நம்ம பேர் நிக்கனும்' இதுதான் யுகயுகமாக மனிதனின் போராட்டம்; அதெல்லாம் இனி எளிய விசயங்கள் தான் என்று தோன்றுகிறது. சமூக வலைதளங்கள் வாழி.
ஆனால், சகா, நான் சொல்வதைக் கேட்டுக்கொள். மரணத்தின் முன்பு, என் சமூக வலைதள கணக்குகளையெல்லாம் முடக்கிவிட்டு, என் இருப்பின் எச்சங்களை மொத்தமாய் துடைத்தெறிந்துவிட்டு போய்சேருவேன்; உன்னை இம்சிக்க மாட்டேன். நீயும் அதையே எனக்கு செய்வாயாக!
உன்மத்தன்
10-07-2021.




Comments