மயிர் உதிர் காலம்
- Unmaththan

- Sep 6, 2025
- 1 min read
Updated: Sep 14, 2025

மயிரே போச்சு என்று திரிந்தவனே உன் மயிர்கள் உதிர்வதை பார்க்கிறாயா? கவலைப்படாதே, இது மயிர் உதிர் காலம், அவ்வளவு தான்.
திருட்டுத்தனமாய் வளர்த்த முடி; PT SIR, திட்டியும் திமிர் எடுத்து வளர்த்த முடி.
தலைவரை பார்த்து வளர்த்த முடி; தலைவி பார்ப்பதற்காகவே வளர்த்த முடி.
வேண்டியவர் இறப்பின் பொருட்டோ, வேண்டுதல் கணக்கின் பொருட்டோ கொடுப்பதற்கு எப்போதும் கைவசமாய் இருந்த முடி - இன்று, கையோடு கொத்து கொத்தாய் கொட்டுவதும் அதே முடி தான் - எந்த மயிரானால் என்ன, விடை பெற விரும்பினால் வருத்தமின்றி வழியனுப்பி வைப்பது தானே சரி, விடு; இது மயிர் உதிர் காலம், அவ்வளவு தான்.
இனி, தலையை சிலுப்பி சிலுப்பி கழுத்தை
சுளுக்கி கொள்ளும் வேதனை இல்லை.
“Bhaiya, normal cutting” என போராடி போராடி
புரிய வைக்கும் வேலையும் இல்லை.
சளிப்பிடிக்கும் தொல்லை இல்லை;
சனியன், செலவு செய்கிற இம்சையுமில்லை.
“சின்ன வெங்காயம் தேச்சுப் பாருங்களேன்” என்ற
சில்லறை அறிவுரைகள் சீக்கிரத்தில் நின்று போகும்;
“சின்ன வயசுல முடி எப்படி இருக்கும் தெரியுமா” என
பாஷாவாக பீத்திக்கொள்ள சத்தியமாய் வாய்ப்பு வரும்.
சாப்பாட்டில் முடி இருந்தால், இனி சந்தேகமின்றி
சண்டைக்கு செல்லலாம்; ஒருவேளை,
சண்டை முத்திப் போனால், தலை முடியால்
மாட்டித் தவிக்காமல் வெளியே வரலாம்.
செய்வினை செய்கிறவர்கள், ஐயோ பாவம்,
கொஞ்சம் கூடுதலாய் சிரமப்பட வேண்டியிருக்கும்.
சிரிக்க வைக்கும் உத்தமர் கூட்டம்
சில ஜோக்குகளை நம் பெயரில்
மொய் வைக்க ஆர்வமாய் காத்திருக்கும்; சிரித்துவிட்டு போகட்டும் விடு.
ஆனால், இனி தலை முடிக்குள் மாட்டிக் கொள்ளாமல்,
மழை, நேரடியாய் நம் தலையைத் தொடும்.
விடியற்காலையும் குளியற்வேளையும் உதிர்ந்த
முடி எதுவுமின்றி சுமூகமாய் நகரும் - அட,
தலைக்கவசம் கூட இனி தயக்கமின்றி அணியலாம்.
சொல்லப்போனால் அவள் தலை கோதி விடுகிற சுகம் தவிர,
சொல்லிக்கொள்ள இழப்பென்று பெரிதாய் ஒன்றுமே இல்லை.
விடு, இது மயிர் உதிர் காலம், அவ்வளவு தான்.
4/365




Comments