வெறுமையின் சட்டை
- Unmaththan

 - Sep 14
 - 1 min read
 
Updated: Sep 17

என் கட்டை விரலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது; நானோ, கதகதப்பாக இருக்கிறது என கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன்.
என் கதையை இப்படி எழுதி விட்டாயே என படைத்தவனிடம் கத்தி கதறி என்ன பயன்? கதை ஆசிரியன், அவன் இஷ்டத்துக்கு கதையை எழுதுகிறான், அதில் நமக்கு என்ன வழக்கு? கொடுத்த பாத்திரத்திற்கு முடிந்தவரை நியாயம் சேர்த்துவிட்டு நடையை கட்டினால், நலம் .
போதும் என்றாகிவிட்டது.
இருப்பதும் இல்லாததும், வருவதும் போவதும்,
ஆசையும் அழுகையும், எல்லாமும் போதும் என்றாகிவிட்டது.
போதும் என்ற வார்த்தையை தவிர மற்ற எல்லாமும் போதும் என்றாகிவிட்டது. போதும்.
வெறுமையின் சட்டை எனக்கு கட்சிதமாய் பொருந்துகிறது.
என் ஊரில் இப்போது யாரும் இல்லை. எல்லாரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். எந்த தெருவில் நுழைந்து எப்படி வெளியேறுவது? எல்லா வழிகளும் மறந்து விட்டது. எதுவும் நினைவின் கணக்கில் பாக்கியில்லை.
என்னோடு நானே தாயம் விளையாடுகிறேன். பாவம், பரிதாபம் எதுவும் பார்ப்பதில்லை. என்னை நானே வெட்டி சாய்க்கிறேன். கண்ணுக்கு தெரியாத போதை ஒன்று என்னை ஆட்கொள்கிறது. தலைக்கேறிய போதையில், தடுமாறி கிடந்த என்னை சில எறும்புகள் தூக்கி வந்து திண்ணையில் வீசிவிட்டு போகின்றன. போதை தெளிந்ததும், எல்லா எறும்புகளையும் மிதித்து நசுக்கி எறிந்தேன். நான் காட்டிய இந்த கருணையை, அந்த எறும்புகளும் எனக்கு காட்டி இருந்திருக்கலாம். ம்ம்ம், சரிதான்.
2/365




Comments