கடவுளின் முத்தமே, சாத்தானின் சகவாசமே...
- Unmaththan

- Sep 10, 2025
- 1 min read
Updated: Sep 14, 2025

ஒரு கலைஞனிடம் கேட்ட வேண்டியது:
“கலை உனக்கு என்னவெல்லாம் கொடுத்தது” என்பதல்ல.
“கலை உன்னிடமிருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொண்டது” என்பதைத்தான்.
கலை, சகலத்தையும் விழுங்கி விடுகின்ற கருந்துளை;
கலை, கண்ணீரின் வாடைக் கண்டு வந்து கழுத்தை கவ்வுகின்ற மிருகம்;
கலை, கட்டுப்பாடுகளை தாண்டிய விதிமீறல்; தான் நினைத்த திசையெல்லாம் திங்களை தோன்றி மறைய செய்யும் சூனியக்காரன்;
கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை;
கலை, மாமூல் கேட்டு வந்து மிரட்டுகின்ற ரௌடி;
கலை, வாழ்வின் அத்தனை சுவாரஸ்யங்களையும் எடுத்து வெளியில் வீசி விட்டு தகராறு செய்கின்ற அடியாள்;
கலை, கடவுளின் முத்தம்; கலை, சாத்தானின் சகவாசம்;
கலை, கருணையற்று நிகழ்த்தப்படுகின்ற கருணைக் கொலை;
கலைக்கும் கலைஞனுக்குமான உறவு ஒரு தவிர்க்க முடியாத துயரம்.
கலை, வாழ்வை கிழித்து தைக்கின்ற தையல்காரன்;
கலைஞன், இரவை இடித்து சமைக்கின்ற சமையல்காரன்;
கலை, பக்கத்து வீட்டு சண்டையின் சுவாரஸ்யம்;
கலைஞன், சண்டையை தடுக்க போய் தலை உடைந்த பரிதாபம்;
கலை, குழப்பி விடுகின்ற தெளிவு;
கலைஞன், தெளிவாய் குழம்பி முழிக்கின்ற அசடு;
கலைஞன் காதல் செய்வான்; கலை அதை பிடுங்கிக் கொள்ளும்;
கலைஞன் ஆசைப்படுவான்; கலை அத்தனையையும் பறித்துக் கொள்ளும்;
கலைஞன் தற்கொலை செய்ய துடிப்பான்;
கலை, அதையும் தடுத்து வேடிக்கை பார்க்கும்;
கடைசியில் ஒரு வழியாகி கலைஞன் செத்தொழிவான்;
கலை, அவனை மௌனமாக நினைத்துக் கொள்ளும்.
ஒரு கலைஞனிடம் கேட்ட வேண்டியது,
“கலை உனக்கு என்னவெல்லாம் கொடுத்தது” என்பதல்ல.
“கலை உன்னிடமிருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொண்டது” என்பதைத்தான்.
1/365




Comments